Published : 16 Sep 2015 03:28 PM
Last Updated : 16 Sep 2015 03:28 PM
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தனது முதல் தாக்குதலை நடத்த பிரான்ஸ் தயாராகி உள்ளது.
இதனை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜேன் யீவ்ஸ் ட்ரெய்ன் உறுதிபடுத்தியுள்ளார்.
இராக், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகள் நடத்தி வரும் வான் தாக்குதலில் பிரிட்டனை தொடர்ந்து பிரான்ஸும் இணைய உள்ளது. இந்தத் தாக்குதல் வரும் வாரத்தில் தொடங்கும் என்று அறிவித்துள்ள பிரான்ஸ், மேலும் தகவல்கள் எதையும் வெளியிட தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளது.
"இலக்கை தேர்வு செய்த பின்னர் தாக்குதல் தொடங்கும். இலக்கு என்பது நமக்கு எதிரியாக திகழும் ஐ.எஸ். மற்றும் அதற்கு ஆதரவானவர்கள் தான். அவர்கள் பிரான்ஸில் வெகு சில மாதங்களிலேயே தங்களது ஆதிக்கத்தை காட்டிவிட்டனர்" என்று பாதுகாப்பு அமைச்சர் ஜேன் யீவ்ஸ் ட்ரெய்ன் கூறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜனவரி மாதம் சார்லி ஹெப்டோ பத்திரிகை மற்றும் கோஷர் வணிக வளாகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதனை தொடர்ந்து அங்கு பல தீவிரவாதச் சம்பவங்களும் ஐ.எஸ். அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளன.
இதனால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கை உச்சகட்டத்தில் உள்ளது. ஐ.எஸ். இயக்கத்தால் தாக்குதல் ஏற்படக் கூடும் என்ற உளவுத் துறை எச்சரிக்கையும் பாரிஸுக்கு அவ்வப்போது விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT