Published : 07 Jul 2020 08:15 PM
Last Updated : 07 Jul 2020 08:15 PM
அமெரிக்காவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்திலும் ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளது.
கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.
குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் விரைவில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியலாம் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அஸ்டின் நகர மேயர் ஸ்டிவ் அல்டர் கூறும்போது, “நாம் இதில் மாறுதல் கொண்டுவரவில்லை என்றால் அடுத்த இரு வாரங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக அமெரிக்காவில் சுமார் 50,000 பேர் வரை கரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அமெரிக்காவில் இதுவரை 30,41,950 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT