Published : 07 Jul 2020 09:29 AM
Last Updated : 07 Jul 2020 09:29 AM
உடலால் ஒட்டிப்பிறந்து, அறுவைசிகிச்சை மூலம் பிரிக்காமல், உலகில் நீண்டகாலம் வாழ்ந்த இரட்டை சகோதரர்கள் கடந்த 4-ம் தேதி அமெரிக்காவில் மரணமடைந்தனர். அவர்களுக்கு வயது 68.
ரோனி, டோனி கால்யன் என்ற பெயர் கொண்ட உடலால் ஒட்டிபிறந்த இரட்டை சகோதரர்கள் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள பீவர்கிரீக் எனும் இடத்தில் கடந்த 1951-ம் ஆண்டு அக்டோபர் 28-ம்தேதி பிறந்தனர். இருவரின் வயிற்றுப்பகுதியும் பிறந்ததில் இருந்தே ஒட்டி இருந்தது, அறுவை சிகிச்சை மூலம் பிரி்த்தால் யாரேனும் ஒருவர் இறக்க நேரிடும் என்பதால், இருவரையும் அப்படியே மருத்துவர்கள் விட்டுவிட்டனர்.
ரோனி, டோனி கால்யன் இருவரும் உடல் ஒட்டிய சகோதரர்களாவே வாழ்ந்து வந்தனர். உலகிலேயே நீண்டகாலம் வாழும் உடலால் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் எனும் பெருமையுடன் தங்களின் 63-வது பிறந்தநாளை கடந்த 2014-ம் ஆண்டு கொண்டாடினார்கள்.
ரோனி, டோனி கால்யான் இருவரும் தாங்கள் வளர்ந்தபின் பிழைப்புக்காக சர்க்கஸில் நடிப்பதும், திருவிழாக்கள், பண்டிகைகளில் வலம் வந்து, மக்களை ஈர்த்து பணம் ஈட்டிய வாழ்ந்து வந்தனர். இருவரின் வருமானத்தால்தான் நீண்டகாலம் குடும்பத்தை நடந்த முடிந்தது என்று இருவரின் மற்றொரு சகோதரர் ஜிம் கால்யான் தெரிவித்தார்.
சர்க்கஸ் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலிருந்து கடந்த 1991-ம் ஆண்டு ஓய்வு பெற்றபின், 2010-ம் ஆண்டுவரை டேட்டன் நகரில் வசித்து வந்தனர். அதன்பின் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்தனர்.
டேட்டன் நகரில் உள்ள மக்கள் இருவரின் நிலையை அறிந்து நிதிதிரட்டி, வீட்டை புத்தாக்கம் செய்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். இரட்டை சகோதர்கள் இருவரும் வெளியே சென்று வருவதற்காக பிரத்தியேகமாக ஒரு சக்கர வாகனத்தையும் உருவாக்கிக் கொடுத்தனர்.
இந்நிலையில் வயது முதுமை காரணமாக கடந்த 6 மாதங்களாக ரோனி, டோனி கால்யான் இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த நிலையில் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தனர் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT