Published : 04 Jul 2020 04:32 PM
Last Updated : 04 Jul 2020 04:32 PM
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகனுடைய காதலிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நோயாளிகள் பட்டியலில் 28.9 லட்சம் கரோனா தொற்றாளர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகனுடைய காதலி கிம்பர்லி கில்ஃபோயிலுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல அமெரிக்கா தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றியவரான கிம்பர்லி, தற்போது டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருடன் இருந்து வருகிரார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபரின் உரையைக் கேட்பதற்காக தெற்கு டக்கோட்டா பகுதிக்குச் சென்ற அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 51 வயதான அவருக்குக் கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்,
இதுதொடர்பாக ட்ரம்ப் பிரச்சார நிதிக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’கிம்பர்லி நலமாக உள்ளார். பரிசோதனையில் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்குக் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் கலந்துகொள்வதாக இருந்த அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபருக்கு நெருக்கமான 3 நபர்களுக்கு வெவ்வேறு காலங்களில் கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT