Published : 04 Jul 2020 03:30 PM
Last Updated : 04 Jul 2020 03:30 PM
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் தொலைபேசியில் உரையாடியதாக இருநாட்டு வெளியுறவு அமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் போர்க்குணம் மற்றும் விரிவாக்கக் கொள்கைகள் பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலைகள் சரிவடைந்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார், மேலும் இவர் சீன வெளியுறவு அமைச்சரிடம் மனித உரிமைகள் மீறல் மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்தியா அத்துமீறி வருவதாகவும் சீன வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தி குறிப்பில், “சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சீனா, பாகிஸ்தான் இருநாடுகளும் சவால்களையும் இடர்பாடுகளையும் சந்தித்து பாதுகாப்பு எய்த சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். நீண்ட காலமாக இருநாடுகளும் பரஸ்பர உதவி மற்றும் நெருக்கம் காட்டி வருகின்றன. இருநாடுகள் தொடர்பான முக்கியமான நலன்கள் குறித்து உறுதியாக இருதரப்பினரும் நின்று பரஸ்பர ஆதரவு அளித்து வந்துள்ளதாகவும் இருநாடுகளும் உண்மையான நம்பகமான கூட்டாளிகள், என்றும், காஷ்மீர், ஆப்கான், தெற்காசிய நிலவரங்களின் பலதரப்பு விஷயங்களை இருதரப்பினரும் பேசினர்” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷிக்கு கரோனா பாசிட்டிவ் என்று உறுதியான பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியா-சீனா இடையே கல்வான் தாக்குதல் மற்றும் அதன் பிறகான வார்த்தைப் பரிமாற்றங்களில் மோதல் நிலவும் சமயத்தில் சீனா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இந்த உரையாடலை தொலைபேசி மூலம் நடத்தியுள்ளனர்.
இந்தியா பதிலடி:
கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிகளில் இந்தியப் படைகள் அத்துமீறுவதாக பாகிஸ்தானின் புகார் குறித்து அரசு தரப்பில் கூறும்போது, “எல்லையில் பாகிஸ்தான் படைகள்தான் தொடர்ச்சியாக அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றன. 2003 போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறிவருகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 2432 முறை பாகிஸ்தான் உடன்படிக்கையை மீறி சண்டையில் ஈடுபட்டதில் 14 இந்தியர்கள் கொல்லப்பட்டு 88 பேர் காயமடைந்துள்ளனர்” என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் குழு அமர்வில் ஹாங்காங் விவகாரங்கள் குறித்து இந்தியா கவலை வெளியிட்ட விவரத்தையும் சீனா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இந்தத் தொலைபேசி உரையாடலில் விவாதித்துள்ளனர்.
ஆனால் பாகிஸ்தான் ‘ஒரு சீனா’ கொள்கையை ஆதரிப்பதாகவும் ஹாங்காங் மட்டுமல்ல, தைவான், திபெத், ஷின்ஜியாங் ஆகியவற்றிலும் சீனாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT