Published : 03 Jul 2020 06:50 PM
Last Updated : 03 Jul 2020 06:50 PM
ஜி ஜின்பிங் சீன அதிபராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுடனான வெளியுறவுக் கொள்கையில் சீனாவின் அணுகுமுறை மூர்க்கமாக மாறியிருக்கிறது என்று அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சீனா-இந்தியா ராணுவங்களுக்கிடையே கடந்த 7 வாரங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே மோதல் முற்றியது.
1987-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினை மிகப்பெரிய அளவில் நடந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பெரிய அளவில் மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவுடனா சீனாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட குழு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ''2013 முதல் ஐந்து முறை எல்லைப் பிரச்சினையை சீனா ஆரம்பித்திருக்கிறது. ஜி ஜின்பிங் சீன அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுடனான அதன் வெளியுறவுக் கொள்கை மூர்க்கமாக மாறியிருக்கிறது. சீனாவும் இந்தியாவும் எல்லை விவகாரம் தொடர்பாகப் பல உடன்படிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லை வரையறை தொடர்பாக தெளிவான முடிவை எட்ட, சீனா உடன்படவில்லை. இதனால் இரு நாடுகளுக்கிடையே அமைதி குலைந்துள்ளது.
இந்தியா, அமெரிக்காவுடன் ஆரோக்கியமான உறவைக் கடைப்பிடித்து வருவதும் தற்போது எல்லைப் பிரச்சினைக்கு ஒரு காரணம் ஆகும். இந்தியா, அமெரிக்காவுடன் ஆரோக்கியமான உறவைக் கடைப்பிடிப்பதை சீனா விரும்பவில்லை. அதன் வெளிப்பாடாகவே இந்தியாவை எச்சரிக்கும் பொருட்டு எல்லைப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்திருக்கிறது.
2012-ம் ஆண்டு ஜி ஜின்பிங் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் மோடியும் பலமுறை சந்தித்து உரையாடியபோதிலும் இரு நாடுகளுக்கிடையே அமைதி ஏற்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT