Published : 02 Jul 2020 12:08 PM
Last Updated : 02 Jul 2020 12:08 PM
இந்தியாவுக்கு எதிராகவும், ஆசியப் பிராந்தியத்தில் மற்ற நாடுகளுக்கு எதிராகவும் ஆவேசமான போக்கைக் கடைப்பிடிப்பதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான இயல்பு என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடைய நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால், சீனா தரப்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் இதுவரை 3 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இருப்பினும் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் குறையவில்லை. இந்தியாவும் படைகளைக் குவித்து வருகிறது.
இதற்கிடையே இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி சீனாவின் 59 செல்போன் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது.
இந்நிலையில் இந்தியா, சீனா இடையிலான பதற்றம் குறித்து நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சர் கேலீக் மெக்நானி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்தியா- சீனா இடையிலான பதற்றமான சூழல் குறித்து அமெரிக்கா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இரு நாடுகளும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும். அதைத்தான் அதிபர் ட்ரம்ப்பும் விரும்புகிறார்'' என்றார்.
அதிபர் ட்ரம்ப் கூறுகையில், “இந்தியாவுக்கு எதிராக சீனாவின் ஆவேசமான போக்கும், ஆசியப் பிராந்தியத்தில் மற்ற நாடுகளுக்கு எதிரான ஆக்ரோஷமான போக்கும், செயல்பாடுகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான முகம் என்பதை உறுதி செய்கின்றன'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT