Published : 30 Jun 2020 02:08 PM
Last Updated : 30 Jun 2020 02:08 PM
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துடன் சீனா மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்திய நாளேடுகளின் இணையதளம், மற்ற இந்திய இணையதளங்களை சீனாவில் உள்ளவர்கள் பார்க்கவோ படிக்கவோ முடியவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதனால் இந்திய இணையதளங்களுக்கும், நாளேடுகளின் இணையதளங்களுக்கும் சீனா தடை விதித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 15-ம் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தார்கள். ஆனால், சீனா தரப்பில் எத்தனை ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பது குறித்து இதுவரை அந்நாட்டு ராணுவம் தெரிவிக்கவில்லை.
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவத் தலைமை கமாண்டர்கள் மட்டத்தில் 3-வது கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடந்து வருகிறது.
ஆனால், எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உருவானபின் இந்தியாவில் சீன இணையதளங்களைப் பார்க்கவோ , சீன நாளேடுகளின் இணையதளங்களைப் பார்க்கவோ சீன மக்களுக்கு இந்தியா சார்பில் எந்தத் தடையும் விதிக்கப்படவி்ல்லை. ஆனால், சீனாவில் உள்ள மக்கள் இந்திய இணையதளங்களைப் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த செல்போன் செயலிகளால் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் வருவதாகப் புகார் வந்ததையதுத்து 59 செயலிகளை மத்திய அரசு நேற்று தடை செய்தது. இந்தத் தடையை அடுத்து இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு நேற்று தடை செய்வதற்கு முன்பே சீனா இந்திய இணையதளங்களைத் தடை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய இணையதளங்களை தற்போது சீனாவில் விபிஎன் சர்வர் மூலமே அணுக முடிகிறது. தொலைக்காட்சி சேனல்கள் ஐபி டிவி மூலமே பார்க்க முடிகிறது. ஆனால், அதிவேக விபிஎன் சேவையும் முடங்கிய நிலையில் கடந்த இரு நாட்களாகச் செயல்படவில்லை என்ற புகாரும் இருக்கிறது.
சீனா தகவல்தொழில்நுட்ப ரீதியாக வல்லமை படைத்தது என்பதால், விபிஎன் சர்வரைக் கூட தனது தொழில்நுட்பத்தின் மூலம் தடுத்துவிட முடியும்
கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் ஊடகங்களுக்கும், இணையதளங்களுக்கு கடும் தணிக்கைக் கட்டுப்பாடு இருக்கிறது. அனைத்துச் செய்திகளும் அரசின் தணிக்கைக்குப் பின்புதான் மக்களைச் சென்றடையும். அரசுக்கு எதிராக எந்த இணையதளமாவது செயல்படுவதாகத் தெரிந்தால் அதை உடனடியாகத் தடுத்து நிறுத்த அரசு தயங்காது. இதனால்தான் ஆசியாவில் சீனாவை இரும்புத்திரை கொண்ட நாடு என்று அழைக்கப்படுகிறது.
இணையதளத்தில் ஐபி அட்ரஸ், டிஎன்எஸ் தாக்குதல், யுஆர்எல் தரம்பிரித்தல் தொழில்நுட்பம், கீவேர்ட்ஸ் தொழில்நுட்பம் போன்றவை அனைத்தும் அரசின் வசமே இருந்து வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் சீனா இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களைத் தடுத்து, தடை செய்துள்ளது. அதில் முக்கிமானவை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ப்ளூம்பெர்க், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு, கூகுள் டிரைவ், கூகுள் டிராப் பாக்ஸ் போன்றவையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT