Last Updated : 28 Jun, 2020 08:31 AM

4  

Published : 28 Jun 2020 08:31 AM
Last Updated : 28 Jun 2020 08:31 AM

இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போர் மக்களால் நடத்தப்படுகிறது: அமெரிக்க இந்திய மருத்துவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி : கோப்புப்படம்

வாஷிங்டன்


இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிரான போர் மக்களால் முன்னெடுத்து நடத்தப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்கு தொடக்கத்திலேயே லாக்டவுனை கொண்டுவந்ததுதான் காரணம் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவி்த்தார்

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மருந்துவர்கள் கூட்டமைப்பில்(ஏஏபிஐ) காணொலி மூலம் நேற்று பிரதமர் மோடி பேசினார். அமெரிக்காவில் உள்ள 80 ஆயிரம் இந்திய மருத்துவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த மருத்துவக் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் ஒருவர் பேசுவது இதுதான் முதல் முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிரானப் போரை மக்கள் முன்னெடுத்து நடத்துகிறார்கள். கரோனா வைரஸ் பரவலைக் வெற்றிகரமாக நாங்கள் கட்டுப்படுத்திதற்கு தொடக்கத்திலேயே லாக்டவுனைக் கொண்டுவந்ததுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனை நாங்கள் தற்சார்புப் பொருளாதாரம் கொண்டதாக மாற்றும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டுள்ளோம்.

உலகில் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் கரோனா வைரஸை இந்தியா சிறப்பாகக் கையாண்டுள்ளது. அமெரி்க்காவில் 10 லட்சம் பேருக்கு 350 பேர் கரோனாவால் உயிரிழந்தார்கள், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் 10 லட்சம் பேருக்கு 600 பேர் வீதம் உயிரிழந்தார்கள்.

ஆனால், இந்தியாவில் கரோனாவால் 10 லட்சம் பேருக்கு உயிரிழப்பு வெறும் 12 பேருக்கும் குறைவாகக் குறைத்துள்ளோம். இதில் உத்தரப்பிரதேச மாநிலம் கரோனா வைரஸுக்கு எதிரானப் போரில் சிறப்பாகச் செயல்பட்டு, பரவலைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்பையும் குறைத்துள்ளது

மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனை வைரஸுக்கு எதிரான போரில் வெல்ல முடியாது. குறிப்பாக கிராமப்புறங்களில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது, இன்னும் பெரும்பலான இடங்களுக்கு பரவவில்லை.

உலகின் 2-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாது. அதிகமான மக்கள் நெருக்கம், மதவழிபாடுக் கூட்டம், அரசியல் கூட்டம், மக்கள் இடம் விட்டு நகர்தல் போன்றவை அனைத்தும் மக்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிக உயர்ந்த மருத்தவ வல்லுநர்கள் இந்தியாவில் கரோனா வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என அச்சப்பட்டார்கள். ஆனால், சரியான நேரத்தில் நாங்கள் லாக்டவுனை அமல்படுத்தி, லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காத்துள்ளோம்.

இந்த லாக்டவுனை காலத்தை நாட்டை தற்சார்பு பொருளாதாரம் கொண்டாதாக மாற்றியுள்ளோம். கரோனா வைரஸ் பரவல் தொடக்கத்தில் ஒரு கரோனா பரிசோதனை மையம்தான் இருந்தது, தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனை மையங்கள் உள்ளன.

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கான பிபிஇ ஆடைகள் பெரும்பாலும் இறக்குமதி செய்துவந்தோம், ஆனால் இப்போது அனைத்தையும் உள்நாட்டில் தயாரிக்கிறோம், ஏற்றுமதியும் செய்கிறோம்.

வாரத்துக்கு 30 லட்சம் என்95 முகக்கவசம் உற்பத்தி செய்கிறோம், 50 ஆயிரம் புதிய வென்டிலேட்டர்கள் கரோனா சிகிச்சைக்காக இருக்கிறது, அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.

அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர்கள் அங்கு சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் பங்கு அளப்பரியது என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x