Published : 26 Jun 2020 09:40 AM
Last Updated : 26 Jun 2020 09:40 AM
இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதை அடுத்து உலக அளவில் படைகளை நியமிக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுச்செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
“சீனாவின் பிஎல்ஏ ராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாங்கள் சரியான நிலையெடுக்க பரிசீலித்து வருகிறோம். காலத்தின் சவால்களை நாங்கள் சிந்தித்து வருகிறோம், எனவே அச்சுறுத்தலை எதிர்கொள்ள போதிய படை ஆதாரங்கள் நம்மிடையே உள்ளதாகக் கருதுகிறேன்” என்றார் மைக் பாம்பியோ.
இந்தப் பரிசீலனை அதிபர் ட்ரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது, இதன் அங்கமாக ஜெர்மனியில் தன் படைகளை 52,000த்திலிருந்து 25,000 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது என்றார் மைக் பாம்பியோ.
“சில இடங்களில் அமெரிக்கப் படைப்பலத்தை குறைத்து சீன ராணுவத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நாடுகளான இந்தியா, மலேசியா, வியட்னாம், இந்தோனேசியா, மற்றும் தென்சீன கடல் பகுதி சவால்களை சமாளிக்க அமெரிக்க ராணுவத்தை இப்பகுதிகளில் பயன்படுத்த, இப்பகுதிகளைப் பலப்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.
எனவே அமெரிக்க படைப்பலம் குறைக்கப்படும் நாடுகள் தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீன ராணுவத்தை எதிர்கொள்ள அங்கு படைப்பலத்தைக் கூட்ட முடியும், இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் முழு ஆலோசனைகளை மேற்கொள்வோம்” என்றார் பாம்பியோ.
ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா தன் படைகளைக் குறைத்தால் ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆதிக்கம் தலைதூக்கும் என்று அங்கு இந்த யோசனைகளுக்கு விமர்சனங்கள் ஏற்கெனவே எழுந்துள்ளன.
ஆனால் பாம்பியோ இந்த வாதங்களை மறுத்து, உலகம் முழுதும் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறைத்து வேறு இடங்களில் கவனம் செலுத்துவது பற்றி இரண்டரை ஆண்டுகளாகவே திட்டமிடப்பட்டு வருகிறது. சில முடிவுகள் எடுக்கப்பட்ட காலம் வேறு இப்போதைய காலக்கட்டம் வேறு.
ரஷ்யாவோ பிற எதிரிகளையோ எதிர்கொள்ள சில இடங்களில் படைகளை வலுப்படுத்துவது என்பது படைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல. எனவே தகராறின் இயல்பு என்ன, அச்சுறுத்தலின் இயல்பு என்ன என்பதை நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. நம் படை ஆதாரங்களை மாற்று இடங்களில் வலுப்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
எனவே ஜெர்மனியில் நம் படைகளின் இருப்பை குறைத்து பிற இடங்களில் அதிகரிப்பது பற்றிய அதிபரின் முடிவுகளின் படி நன்கு யோசித்துதான் சில மாற்று முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதனை எப்படிச் செய்வது என்பது பற்றி பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் இன்று லண்டனிலும் நாளை பிரஸ்ஸல்சிலும் விவாதிக்கிறார். ஐரோப்பிய கூட்டாளிகளும் இதனை புரிந்து கொள்வார்கள், நாமும் புரிந்து கொள்வோம். ஜனநாயகத்தின் அடிப்படை ஆர்வம் கருதியே இந்த யோசனைகள், அமெரிக்காவின் அடிப்படை ஆர்வமும் ஜனநாயகம் பற்றியதே, என்று பாம்பியோ விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...