Published : 25 Jun 2020 07:08 PM
Last Updated : 25 Jun 2020 07:08 PM

ஜனநாயகத் தன்மையிலிருந்து விலகும் உலக நாடுகள்: செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை

கரோனா காலத்தில் ஜனநாயகத் தன்மையிலிருந்து விலகி, மக்கள் மீதான அதன் அதிகாரத்தை உலக நாடுகள் அதிகப்படுத்தி வருவதாக வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், நோபல் விருது பெற்றவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சுவீடனைத் தலைமையிடமாகக் கொண்ட ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம் இந்த விழிப்புணர்வுச் செயல்பாட்டை முன்னெடுத்துள்ளது. அந்தக் கடிதத்தில், ''ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. தற்போது மக்களின் சுதந்திரம், சுயமரியாதை, சுகாதாரம் அனைத்தும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. சுதந்திரத்தில் அக்கறையுள்ள மக்கள் அவர்களுடைய எதிர்ப்பைக் காட்ட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கங்களின் அடக்குமுறையை எச்சரிக்கும் விதமாக அதன் சர்வாதிகாரப் போக்குகளைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ள கடித்தத்தில் அமெரிக்க முன்னாள் செயலாளர் மேட்லின் ஆல்பிரைட், நடிகர் ரிச்சர்ட் கெரெ, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி, லெச் வலிசா, ஹோஸே ராமோஸ் ஹோர்டா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கெவின் காசாஸ் ஜமாரோ கூறுகையில், ''கரோனா வைரஸ் உலகளாவிய அளவில் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அரசியல் ரீதியான பாதிப்பையும் பார்த்து வருகிறோம். சில நாடுகள் இந்தக் காலகட்டத்தில் ஜனநாயக விரோதப்போக்கை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

மக்கள் மீதான அதன் அதிகாரத்தை அதிகப்படுத்தி வருகின்றன. ஹங்கேரியில் அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அவசரகாலச் சட்டத்தை விரிவுபடுத்துகிறார்.

அவசரகாலச் சட்டம் மிக இக்கட்டான காலகட்டத்தில் பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்படக்கூடியது. ஆனால், தற்போது கரோனா காலகட்டத்தில் சில நாடுகள் அச்சட்டத்தைப் பயன்படுத்தி அதன் அதிகாரத்தை அதிகப்படுத்தி வருகின்றன. மக்கள் பயந்துபோய் இருக்கின்றனர். அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x