Last Updated : 11 Sep, 2015 03:31 PM

 

Published : 11 Sep 2015 03:31 PM
Last Updated : 11 Sep 2015 03:31 PM

ஜப்பானில் வரலாறு காணாத வெள்ளம்: 1 லட்சம் மக்கள் வெளியேற்றம்; பலர் மாயம்

ஜப்பானில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக வெள்ள நீர் தலைநகர் டோக்கியோவுக்கு வடக்கே ஓடும் கினுகவா நதி கரைகளை உடைத்துப் நகருக்குள் புகுந்தது. ஜோஸோ என்ற நகருக்குள் தண்ணீர் புகுந்ததில் கார்களும் கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

காருக்குள் சிலர் இருந்தபடியே அடித்துச் செல்லப்பட்டனர். வானிலை நிலவரம் மோசமாக இருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கையை சரியாக கூற முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகள் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர்களின் மூலம் மீட்டு, ரப்பர் படகுகள் கொண்டு வெளியேற்றி வருகின்றனர்.

ஜப்பானில் தற்போது வந்துள்ள மழை வெள்ளம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2011ல் ஏற்பட்ட சுனாமி பாதிப்பை தொடர்ந்து பேரிடர் தவிர்ப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஜப்பான் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x