Published : 24 Sep 2015 07:05 PM
Last Updated : 24 Sep 2015 07:05 PM
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரையில் ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி 717 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் ஈரான் ஹஜ் தலைவர் சவுதி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த நெரிசலில் சிக்கி ஈரான் நாட்டைச் சேர்ந்த 43 பேர் பலியாகியுள்ளனர். சவுதி அரேபியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானவையாக இல்லை என்று ஈரான் கண்டித்துள்ளது.
இன்று காலை உள்ளூர் நேரம் 9 மணியளவில் நெரிசல் தொடங்கியது. அதாவது இந்திய நேரம் 11.30 மணியளவில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது.
மருத்துவமனை அதிகாரி ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு கூறும்போது, “நெரிசல் சம்பவம் ஜமாரத் பால அமைப்புக்கு வெளிப்புறத்தில் நடந்தது. அங்குதான் கல்லெறிதல் சடங்கு நடைபெற்றது. அப்போது யாத்திரிகர்களின் பெரும்பகுதியினரான ஒரு பிரிவு மற்றொரு குழுவினருடன் கலந்ததில் பெரும் நெரிசல் ஏற்பட்டது” என்றார்.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 19,52,817 ஆகும். இதில் 1.4 மில்லியன் அயல்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அயல்நாட்டு தூதரகங்கள் தங்கள் நாட்டு குடிமகன்களின் உடல்களை அடையாளம் காட்ட சவுதி அரசுடன் ஒத்துழைத்து வருகின்றன.
சவுதி அரேபியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சாடிய ஈரான் நெரிசல் பகுதியில் 2 வழிகளை அதிகாரிகள் அடைத்தனர், இதுதான் இத்தகைய பெரிய துயரச் சம்பவத்துக்குக் காரணம் என்று ஈரான் ஹஜ் யாத்திரை அமைப்பின் தலைவர் ஒஹாதி ஈரான் தொலைக்காட்சியில் சாடினார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது, “இன்றைய துயரச் சம்பவம் மோசமான நிர்வாகத்தினாலும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு குறித்த எந்த வித கவனமும் இல்லாமல் செயல்பட்டதன் விளைவே. சவுதி அதிகாரிகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று கடுமையாக சாடியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT