Last Updated : 17 Jun, 2020 09:32 AM

 

Published : 17 Jun 2020 09:32 AM
Last Updated : 17 Jun 2020 09:32 AM

ஒப்பந்தத்தை இந்திய வீரர்கள் மீறிவிட்டார்கள்; கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு இறையான்மை இருக்கிறது: சீன அரசு ஊடகம் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின் பிங்

பெய்ஜிங்


கிழக்கு லடாக் அருகே அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கு மீது சீனாவுக்கு எப்போதும் இறையாண்மை இருக்கிறது அதில் மாற்றமில்லை. இந்திய வீரர்கள் அத்துமீறி வந்து தாக்குதல் நடத்தியதால்தான் இருதரப்பும் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாக சீனாவின் அதிகாரபூர்வ ஊடகமான தி குளோபல் டைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர்வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடிக்கிறது

45 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா-சீனா ராணுவ மோதலில் முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சேக், தவுலத் பெக் ஓல்டி ஆகிய எல்லைப் பகுதிகளில் கடந்த5வாரங்களாக இந்தியா, சீனா ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வந்தது. இரு தரப்பிலும் படைகளைக் குவித்து வந்தனர்.

இந்த மோதலைத் தீர்க்க இரு நாட்டு ராணுவ மேஜர் அளவில் பேச்சு நடந்தாலும் பதற்றம் தணிந்ததே தவிர பிரச்சினை தீரவில்லை. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் மூலமும் பேச்சு நடத்தப்பட்டு, இரு நாட்டு படைகளும் அங்கிருந்து திரும்பப்பெறுவது என முடிவு ெசய்யப்பட்டு படைகள் வாபஸ் பெற்று வந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது

இந்தியத் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டவுடனே சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி(பிஎல்ஏ) மேற்கு பகுதி கமாண்டர் செய்தித்தொடர்பாளர் ஹாங் ஷூலி முதல்முறையாக எதிர்வினையாற்றினார்.

அவர் தி குளோபல் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ கிழக்கு லடாக் அருகே இருக்கும் கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் சீனாவுக்கு எப்போதும் இறையாண்மை இருக்கிறது இதில் மாற்றமில்லை. இந்திய ராணுவத்தினர் ஆத்திரமூட்டும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தி வந்தனர், இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தையும் மீறினார்கள். ராணுவ கமாண்டர் அளவில் நடந்த பேச்சும், ராணுவ ரீதியான நட்பும், இரு நாட்டு மக்களின் உணர்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தினர் தாங்கள் அளித்த வாக்குறுதியை மீறிவிட்டு மீண்டும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் அத்து மீறி எல்லை கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்து, திட்டமிட்டே எங்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதுதான் இருதரப்புக்கும் இடையே தாக்குதல் தீவிரமடையவும், உயிரிழப்பு ஏற்படவும் காரணமாக அமைந்தது.

இந்திய ராணுவம் அனைத்து விதமான ஆத்திரமூட்டும் செயல்களையும் நிறுத்த வேண்டும். அனைத்து விவகாரங்களையும் பேச்சுமூலம் தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

ஆனால் சீனா ராணுவம் தரப்பில் இதுவரை எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள், உயிரிழந்துள்ளார்கள் என்பது குறித்து சீன ராணுவம் தெரிவிக்கவில்லை, தி குளோபல் டைம்ஸ் நாளேடும் வெளியிடாமல் மவுனம் காக்கிறது. ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று மட்டும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது

தி குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் வூ ஜிஜின் கூறுகையில் “ கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்தினர் தீவிரமான மோதலில் ஈடுபட்டார்கள். இதில் இந்தியத் தரப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள், எங்கள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

அதன்பின் தி குளோபல் டைம்ஸ் நாளேடு ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில் “ சீன ராணுவம் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பதை குளோபல் டைம்ஸ் ஒரு போதும் கூறவில்லை. எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பதையும் உறுதி செய்ய முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது

பின்னர் தி குளோபல் டைம்ஸ் நாளேட்டின் ஆசிரியர் வூ ஜிஜின் மற்றொரு ட்விட்டர் பதிவில் “ எனது புரிதல் என்னவென்றால், இரு தரப்பு ராணுவத்திலும் உயிரிழப்பு எண்ணிக்கையை ஒப்பிடுவதை சீன தரப்பு விரும்பவில்லை, இதனால் இரு தரப்பு மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தைத் தவிர்க்க முடியும். இது சீனாவின் நல்லெண்ணமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x