Published : 17 Jun 2020 08:26 AM
Last Updated : 17 Jun 2020 08:26 AM
இந்தியா, சீனா இடையிலான லடாக் எல்லைப் பிரச்சினையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம், இரு நாடுகளும் அமைதிப்பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சேக், தவுலத் பெக் ஓல்டி ஆகிய எல்லைப் பகுதிகளில் கடந்த5வாரங்களாக இந்தியா, சீனா ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வந்தது. இரு தரப்பிலும் படைகளைக் குவித்து வந்தனர்.
இந்த மோதலைத் தீர்க்க இரு நாட்டு ராணுவ மேஜர் அளவில் பேச்சு நடந்தாலும் பதற்றம் தணிந்ததேத் தவிர பிரச்சினை தீரவில்லை. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் மூலமும் பேச்சு நடத்தப்பட்டு, இரு நாட்டு படைகளும் அங்கிருந்து திரும்பப்பெறுவது என முடிவு ெசய்யப்பட்டது
இந்நிலையில் கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர்வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடிக்கிறது
45 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா-சீனா ராணுவ மோதலில் முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழலை தீவிரமாக கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாஷிங்டனில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ இந்தியா, சீனா ராணுவத்தினர் இடையே எல்லையில் ஏற்பட்ட பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இந்தியாவும், சீனாவும் மேலும் பதற்றத்தை அதிகரிக்காமல் இருந்து, பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில், பேச்சின் மூலம் தீர்வு காண அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.
இந்திய ராணுவம்தரப்பில் 20 வீரர்கள் பலியாகியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளதை அறிந்தோம். இந்த தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.
கடந்த 2-ம் தேதி இந்தியப்பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையே நடந்த தொலைப்பேசி உரையாடலில் இந்தியா, சீனா எல்லைப்பிரச்சினை குறித்தும் பேசப்பட்டது” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT