Last Updated : 11 Sep, 2015 10:51 AM

 

Published : 11 Sep 2015 10:51 AM
Last Updated : 11 Sep 2015 10:51 AM

தவிக்கும் தாய்லாந்து - 7

தாய்லாந்து அரசியலில் அழுத்தமாக இடம்பெற்ற இன்னொருவர் தக்ஸின் ஷினவத்ரா. 2001 முதல் 2006 வரை பிரதமராக முழுவதுமாக ஐந்து வருடங்கள் ஆட்சி செய்தவர். (பாதியில் ராணுவ ஆட்சி புகாமல் இப்படி ஆட்சி செய்தவர்கள் தாய்லாந்தில் மிகமிகக் குறைவு).

தாய்லாந்தில் போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. “போதைப் பொருளுக்கு எதிராகப் போராடுவோம்’’ என்று அறிவித்தார் மன்னர். போதைப் பொருள் கடத்துபவர்களை விசாரித்து தண்டிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டது. பிரதமர் தக்ஸினும் முழுமையாக ஒத்துழைத்தார். ஒவ்வொரு அரசு அதிகாரிக்கும் இலக்கு நிச்சயிக்கப்பட்டது போதைப் பொருள் சம்பந்தப்பட்ட இவ்வளவு கறுப்பு ஆடுகளை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று.

இதைத் தொடர்ந்து போதைப் பொருள் வியாபாரிகள் பலரும் கொல்லப்பட்டனர். மனித உரிமைக் கழகம் இதை விமர்சித்தது. என்றா லும் குறைந்தது பள்ளிக்கூடங் களாவது போதைப் பொருள்களின் பிடியிலிருந்து நீங்கியது உண்மை.

பிரதமர் தக்ஸின் ஆட்சியை மன்னர் பூமிபோல் தனது அப்போதைய பிறந்த நாளின்போது பெரிதும் பாராட்டினார்.

‘‘அரசின் கண்டிப்பான நடவடிக்கையால் 2,500 பேர் இறந்திருக்கலாம். ஆனால் போதைப் பொருள் நடமாட்டம் அதே அளவு தொடர்ந்திருந்தால் எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்’’ என்றார்.

எனினும் உலக மனித உரிமை அமைப்புகள் அழுத்தம் அளித்தன. விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்தார் மன்னர். “காவல் துறையால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே’’ என்று கூறி நோக்கத்தை நிறைவேற்றியது விசாரணைக் கமிஷன். (பின்னர் 2006-ல் வேறொரு ராணுவப் புரட்சி நடந்து புதிய ராணுவத் தளபதி பொறுப்பேற்றபோது மீண்டும் இது தொடர்பான ஒரு விசாரணை நடைபெற்றது. இதன்படி கொல்லப்பட்டவர்களில் பாதி பேர் அப்பாவிகள் என்றும், தவறான தகவல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்கள் என்றும் கூறியது. எனினும் போதிய ஆதாரம் இல்லாததால், சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை).

இந்த இடத்தில் தக்ஸின் குறித்த சில மேல் விவரங்களைப் பார்ப்போம். அவர் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. அதுமட்டு மல்ல தேர்ந்த வியாபாரியும்கூட. 1987-ல் ஷின் கார்ப்பரேஷன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இது தகவல் தொழில்நுட்பம் தொடர்பானது.

இந்த வியாபாரம் ஓகோவென்று செழிக்க, தாய்லாந்தின் மிகப் பணக்காரர்களில் ஒருவராக ஆனார்.

காலப்போக்கில் இவருக்கு அரசியலில் கால்பதிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது. 1998-ல் ஒரு கட்சியை தொடங் கினார். அதன் பெயர் தாய் ரக் தாய் கட்சி. 2001 பொதுத்தேர்தலில் அவர் பிரதமர் ஆனார்.

அப்படி ஒரு புகழ் இவரது ஆட்சிக்கு. முக்கியமாக கிராமத்து ஏழைகள் மத்தியில் மிகவும் புகழப் பட்டார். இதற்கு முக்கியக் காரணம் மிகக் குறைவான தொகையில் மருத்துவ சிகிச்சையை இவர் அரசு அளித்ததும், அரசு நிதி நிறுவனங்களிலிருந்து அவர்கள் பெற்ற கடனை ரத்து செய்ததும் தான். தவிர அதிகப்படி கடனையும் வழங்க வகை செய்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாங் காக்கின் மேல்தட்டு வர்க்கத்தினரை விமர்சனம் செய்தார்!

என்றாலும் இவரை பணக்காரர்களும் அதிகமாக வெறுத்துவிடவில்லை. காரணம் ஒரு பன்னாட்டு நிறுவனம்போல அரசை இவர் நடத்த முயற்சித்ததுதான். இவரது கொள்கைகள் ‘தக்ஸினாமிக்ஸ்’ (எகனாமிக்ஸ் போல) என்றே அழைத்தார்கள். 1990-களில் தாய் லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு நிதி நெருக்கடி உண்டானதைக் குறிப்பிட்டோம். அதிலிருந்து தாய்லாந்து பெருமளவு மீண்டது என்றால் அதற்கு தக்ஸினின் சில நடவடிக்கைகளும் காரணம்.

தான் பிரதமர் ஆன அதே ஆண்டில் தக்ஸின், பர்மாவுக்கு விஜயம் செய்தார். இருநாட்டு ராணு வங்களும் மோதிக் கொண்டதை அடுத்து மியான்மர் - தாய்லாந்து எல்லைகளை மூடச் செய்திருந்தது தாய்லாந்து. தக்ஸினின் மியான்மர் விஜயத்துக்குப் பிறகு இந்தத் தடை நீக்கிக் கொள்ளப்பட்டது (ஆனால் அதற்கு அடுத்த வருடமே மீண்டும் ராணுவங்கள் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, மேற்படி தடை மீண்டும் அமலுக்கு வந்தது வேறு விஷயம்).

மியான்மர் மட்டுமல்ல. கம்போடி யாவிலும் ஒரு புயல் போன்ற கொந்தளிப்பு உருவாக தாய் லாந்தின் ஒரு நபர் காரணமானார். சொல்லப்போனால் 2003-ல் தாய்லாந்து அரசு உலக அளவில் எந்தப் பிரச்னையையும் தொடங்கிவிடவில்லை. ஆனால் பிரபல தாய்லாந்து தொலைக்காட்சி நடிகையும், வெள்ளித் திரையிலும் சில பாத்திரங்களை ஏற்று நடித்தவருமான சுவனந்த் என்ற நடிகை ஒரு பேட்டியில் கூறியதாக வெளியான வாசகங்கள்தான் தீப்பற்றிக் கொள்ளக் காரணமாக அமைந்தது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x