Published : 21 Sep 2015 11:03 AM
Last Updated : 21 Sep 2015 11:03 AM
வரும் 24-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்துள்ள விருந்து நிகழ்ச்சியில் 50 முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (சி.இ.ஓ.க்கள்) கலந்து கொள்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 50 என்ற இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விருந்து நிகழ்ச்சியைத் தவிர செப்டம்பர் 26, 27 தேதிகளில் அமெரிக்காவின் மேற்குக்கரையில் பிரதமர் மோடி ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் டிஜிட்டல் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச் சபையின் 70-வது ஆண்டு அமர்வில் பங்கேற்பதற்காக நரேந்திர மோடி அமெரிக்கா செல்லவுள்ளார். அமெரிக்க பயணத்தின்போது, டிஜிட்டல் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28-ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கிறார். அமெரிக்கா செல்லும் வழியில் அயர்லாந்து செல்கிறார்.
அமெரிக்க பயணம் குறித்து மோடி கூறும்போது, "ஐ.நா.வின் 70-வது ஆண்டுவிழாவின் போது மாற்றத்துக்கான ஆக்கபூர்வ விவாதங்களை முன்னெடுத்துச் செல்வது மிக பொருத்தமானதாக இருக்கும்" எனக் குறிப்பிடிருந்தார்.
அமெரிக்கப் பயணத்தின்போது மோடி, பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது. செப்டம்பர் 27-ல் சான் ஜோஸில் இந்திய மக்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT