Published : 11 Jun 2020 05:09 PM
Last Updated : 11 Jun 2020 05:09 PM
அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டும். அதேசமயம், கரோனா பாதிப்பு குறைய வேண்டும் என எதிர்பார்ப்பது விருப்பமாகவே இருக்கிறது என்று அமெரிக்க வாழ் இந்திய மருத்துவப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏறக்குறைய 20 லட்சத்தை நெருங்குகிறது. உயரிழந்தோர் எண்ணிக்கை 1.12 லட்சமாக அதிகரித்துள்ளது. இருப்பினும் மக்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடவும், லாக்டவுன் கட்டுப்பாடுகளை நீக்கியும் பல்வேறு மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன.
இதுகுறித்து ஹார்வார்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டியூட் மையத்தின் தலைவரும் அமெரிக்க வாழ் இந்திய மருத்துவப் பேராசிரியருமான ஆஷ்ஸ் ஜா, சிஎன்என் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''நான் கூறும் தகவல்கள் மக்களைக் குழப்பவோ, அச்சமூட்டவோ அல்ல. மக்கள் வீட்டுக்குள் இருப்பதை விட வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக விலகலுக்கான விதிகளைக் கடைப்பிடியுங்கள். அமெரி்க்காவில் கரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்தி, மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்
அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோயாளிகள் குறைந்து வருகிறார்கள் என்று எதிர்பார்த்தால் அது நல்ல விஷயம்தான். அடுத்த 3 மாதங்களில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் முற்றிலும் மறைந்துவிட்டால் அப்போது அதாவது செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் கரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள்.
நான் இந்தக் கணிப்பை வெறும் ஊகத்தின் அடிப்படையில் கூறவில்லை. அமெரிக்காவில் இன்று சராசரியாக 800 முதல் 900 பேர் வரை உயிரிழக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஒரு மாதம் தொடர்ந்தாலே 27 ஆயிரம் பேர் மாதம் பலியாகிறார்கள்.
ஒருவேளை கோடைக் காலத்தில் கரோனா வைரஸ் நேர்கோடு சமமாகி பாதிப்பு குறைந்துவிட்டால் சூழல் மோசமாகாது. ஆனால், நாள்தோறும் 800 முதல் 900 பேர் எனும் வீதத்தில் இறப்பு தொடர்ந்தால் வரும் செப்டம்பருக்குள் அமெரிக்காவில் கூடுதலாக 88 ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிடும். 2 லட்சத்தை எட்டும் வாய்ப்புள்ளது.
கரோனா வைரஸ் தாக்கம் நியூயார்க், நியூஜெர்ஸி, கனெக்ட்கட், மசாசூசெட்ஸ் ஆகிய நகரங்களில் குறைந்து வருகிறது. ஆனால், அரிசோனா, ப்ளோரிடா, டெக்சாஸ், நார்த் கரோலினா, தெற்கு கோலினா ஆகிய மாநிலங்களில் அதிகரித்து வருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வெளியே வரும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும், ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை என்பதுதான் வேதனை. சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் துரதிர்ஷ்டவசமாக செப்டம்பர் வரை மாதம் 25 ஆயிரம் உயிரிழப்பை அமெரிக்கா சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
மாயாஜாலம் மூலம் கரோனாவை மறையவைக்க முடியாது. கோடைக் காலத்தில் சூழலில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். ஆனால், இதமான கோடைக் காலத்தில் கரோனா எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரிக்கவே செய்யும்.
ஒருவேளை கோடையில் வெயில் அதிகமாக இருந்தால் மக்கள் வெளியே அதிகம் அலையமாட்டார்கள். அப்போது இயல்பாகவே பரவல் குறையும். ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு வெயில் இல்லாவிட்டால் அதிகமான கரோனா நோயாளிகள் உருவாகலாம். அரிசோனா போன்ற மாநிலங்களில் மிகவும் மோசமாக இருக்கும்''.
இவ்வாறு ஆஷ்ஸ் ஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT