Published : 11 Jun 2020 01:33 PM
Last Updated : 11 Jun 2020 01:33 PM
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து உலகின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது. ஆஸ்திரேலியாவிலும் இம்மாதிரியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் நடந்த இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விக்டோரியா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “போராட்டத்தில் கலந்துகொண்ட 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா அறிகுறி உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மொத்தம் 7,274 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,744 பேர் குணமடைந்த நிலையில் 102 பேர் பலியாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT