Published : 10 Jun 2020 01:47 PM
Last Updated : 10 Jun 2020 01:47 PM

ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அமெரிக்காவில் நிறவெறி காரணமாக போலீஸாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்தமாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போலீஸ் அதிகாரி டெர்ரக் சவுவின் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவுசெய்தனர். அவருடன் இருந்த 3 போலீஸார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதி ஊர்வலம் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

ஊர்வலத்தில் பங்கேற்ற ஜார்ஜ் ஃபிளாய்டின் சகோதரர் ரோட்னி கூறும்போது, “உலகம் முழுவதும் ஜார்ஜ் ஃபிளாய்ட் நினைவு கூரப்படுவார். அவர் உலகை மாற்றப் போகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

ஊர்வலத்திற்குப் பிறகு ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் ஹூஸ்டனில் அவரது தாயாரின் உடலுக்கு அருகில் நல்லடக்கம் செய்ய இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x