Published : 09 Jun 2020 11:56 AM
Last Updated : 09 Jun 2020 11:56 AM
பாகிஸ்தான் ஏழை நாடு என்றும் ஊரடங்கைத் தளர்த்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கைத் தளர்த்தியது ஆபத்தானது என்று பல்வேறு தரப்பினர் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு தற்போது இம்ரான்கான் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான்கான் கூறுகையில், “ ஊரடங்கு கரோனா பரவலுக்கு தீர்வாகாது என்பதை உலக நாடுகள் அறியத் தொடங்கியுள்ளன. வைரஸ் பரவிக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியும். கரோனா வைரஸ் உச்சத்திற்கு வந்த பிறகுதான் குறையும்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதற்கான முன்னெச்சரிக்கையோடு இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது மிகவும் கடினமான காலம். பாகிஸ்தான் ஏழை நாடு. ஊரடங்கைத் தளர்த்துவதைக் காட்டிலும் வேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வருகிற நிலையில் மக்களிடம் சமூக இடைவெளி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்கிடும் வகையிலும் தன்னார்வலர்கள் குழுவை பாகிஸ்தான் அரசு ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை கரோனா வைரஸால் 1,08,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,172 பேர் பலியாகி உள்ளனர். 35 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT