Published : 03 Sep 2015 10:36 AM
Last Updated : 03 Sep 2015 10:36 AM
மாணவர்கள் புரட்சி மற்றும் அதற்கு முந்தைய சயாமியப் புரட்சி ஆகியவை தாய்லாந்தில் நடந்த போது சுகோதாய் சாம்ராஜ்யம் குறித்து வெளியான சில தகவல்கள் பரவலாகப் பேசப் பட்டன. மன்னர் நான்காம் ராமா சரித்திரத்தில் ஈடுபாடு கொண்டவர். அகழ்வாராய்ச்சியிலும் ஆர்வம் கொண்டவர். சுகோதாய் வரலாறை இவர் கண்டுபிடித்து விளக்கினார்.
சுகோதாய் என்பது சாம்ராஜ்யம் மட்டுமல்ல, தாய்லாந்தின் முதல் தேசியத் தலைநகரின் பேரும்கூட. (பின்னர் ஆயுத்தயா, தோன்புரி, பாங்காக் என்று தலைநகரங்கள் மாறின). சுகோதாய் சாம்ராஜ் யத்தில் விளங்கிய மிகச் சிறந்த மன்னர்கள் குறித்த விவரங்கள் வெளியாயின.
சுகோதாய் காலத்தில் தாய்லாந் தில் நிலவிய ஒருவகை ஜனநாயகம் புரட்சிக்காரர்களால் மேற்கோள் காட்டப்பட்டது.
சுகோதாய் காலத்தில் மன்ன ருக்கும், மக்களுக்கும் உள்ள உறவு ‘தந்தை மகன்’ ஆகியோ ருக்கிடையே நிலவிய உறவுபோல சித்தரிக்கப்பட்டது. இதுவே தாய்லாந்தில் ஆட்சியின் அடிப்படை என்றும் கருதப்பட்டது. பின்னர் கெமர்களின் அங்கோர் சாம்ராஜ்யம் தாய்லாந்தில் நுழைந்த போது சுகோதாய் தனித்தன்மையை இழந்தது.
இந்து மதம் மற்றும் மஹாயான புத்தமதம் ஆகியவை தாய்லாந்தில் வேர்விடத் தொடங்கின.
முதலாம் உலகப்போரின்போது சயாம் (அப்போது தாய்லாந்தின் பெயர் இதுதான். 1939ல்தான் சயாம் தாய்லாந்து என்று தன் பெயரை மாற்றிக் கொண்டது) பிரிட்டனை வெகுவாக ஆதரித்தது. ஆனால் 1941ல் ஜப்பானிய ராணுவம் தாய்லாந்தை ஆக்ரமித்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாய்லாந்து, ஜப்பானிய ராணு வத்தை தன் பகுதியைத் தாண்டிச் செல்ல அனுமதித்தது. இதன் மூலம் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த மலாய் தீபகற்பம், பர்மா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளை ஜப்பானிய ராணுவம் அடைய முடிந்தது. 1942-ல் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின்மீது தாய்லாந்து போர் பிரகடனமே செய்தது.
1945ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது. உலக நாடுகளின் ஒப்பந்தப்படி தாய்லாந்து தான் கைப்பற்றியிருந்த லாவோஸ், கம்போடியா, மலேசியா ஆகிய நாடு களின் நிலப்பரப்பை அந்தந்த நாடு களுக்குத் திருப்பிக் கொடுக்க நேரிட்டது. இந்த காலகட்டத்தில் தான் மன்னர் ஆனந்தா தாய்லாந்துக்குத் திரும்பினார்.
மன்னர் தாய்லாந்துக்குத் திரும்பினாரா! அப்படியானால் அவர் அதற்கு முன் எங்கிருந்தார்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன் தாய்லாந்தில் ஆண்டாண்டு காலமாக மன்னர் பதவிக்குள்ள மரியாதையை சுட்டிக் காட்டுவது அவசியமாகும்.
பாங்காக் செல்லும் யாருமே அங்குள்ள அரண்மனைக்குச் செல்லாமல் திரும்ப மாட்டார்கள்.
அதனால் என்ன நம் நாட்டின் மைசூர் மகாராஜா அரண்மனை, உதய்பூர் அரண்மனை ஆகியவற் றுக்குக் கூடதான் சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள் என்கிறீர் களா? தாய்லாந்தைப் பொருத்த வரை இரண்டு வேறுபாடுகள். மன்னருக்கு அரசியல் அந்தஸ்து அங்கு இன்னமும் உண்டு. தவிர அரசரின் அலுவலக வேலைகள் அந்த அரண்மனையில் இன்னமும் நடைபெறுகின்றன.
பாங்காக் அரண்மனையின் பெயரே 'கிராண்ட் பேலஸ், (Grand Palace). நாற்புறங்களிலும் சுவர்களால் சூழப்பட்ட இந்த அரண்மனை நகரின் மையப் பகுதியில் சவேஃப்ரையா நதிக்கரையில் அமைந்துள்ளது.
சயாம் மன்னர்களின் முகவரி இதுவாகத்தான் இருந்தது. தாய்லாந்தின் இப்போதைய மன்னர் பூமிபோல், வேறொரு இடத்தில் (சித்ரலதா அரண்மனை) வசிக்கிறார். என்றாலும் அரசரின் அலுவலக வேலைகள் இப்போதும் கிராண்ட் அரண்மனையில்தான் நடைபெறுகின்றன.
அரண்மனைக்குள் கண்டு ரசிப்ப தைவிட, அரண்மனை வளாகத்தில் கண்டு ரசிக்கப் பல விஷயங்கள் உள்ளன என்றால் அது மேலும் பொருத்தமாக இருக்கும். பாங் காக்கின் மையப் பகுதியில் உள்ள இந்த வளாகத்தில் ஒன்றல்ல, பல கட்டிடங்கள்.
நுழைவுக் கட்டணம் (ஒருவருக்கு சுமார் 1,000 ரூபாய்) இந்தியர்களுக்கு திகைப்பை உண்டாக்குகிறது என்றால் மேலை நாட்டினர் பலருக்கும் வேறொரு நிபந்தனை கொஞ்சம் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட உடைகள் தவிர பிறவற்றை அணிந்தவர்கள் அரண்மனைக்குள் சென்றுவிட முடியாது.
நாங்கள் சென்றிருந்தபோது மினி ஸ்கர்ட் அணிந்து கொண்டு உள்ளே செல்ல முடியாது என்று ஒரு பிரான்ஸ் பெண்மணிக்குத் தடை விதிக்கப்பட்டது. 'உள்ளாடைகள் தெரியும்படியான (see-through) உடை அணிந்திருக்கிறீர்கள்' என்று வேறொரு இளம் பெண் தடுத்து நிறுத்தப்பட்டார். ''சட்டைக் கைப் பகுதியை மடித்து விட்டுக் கொள்ளக் கூடாது'' என்று ஓர் ஆண் அறிவுறுத்தப்பட்டார். ''டிரவுசர் அணிந்து செல்ல முடியாது'' என்று வேறொருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சொல்லப்போனால் எந்தவகை யான ஆடைகளை அணிந்து செல்லத் தடை என்பதை செயல் முறை விளக்கம் போலவே படங்கள் வரைந்து விளக்கியிருக்கிறார்கள்.
நல்ல வேளையாக தடை செய்யப்பட்ட உடை அணிந்து வந்தவர்களுக்கு 'நிபந்தனைக் குட்பட்ட மரியாதையான' உடை களை தாற்காலிகமாக வழங்கு கிறார்கள்.
அரண்மனையில் மட்டுமல்ல தாய்லாந்தின் பல சுற்றுலாத் தலங்களிலும் இப்படிப்பட்ட உடைக் கட்டுப்பாடுகள் உண்டு. ஒருபுறம் 'பாங்காக்கில் கணிசமான பகுதிகளில் பாலியல் தொழில் வெகு சகஜம்; அதற்காகவே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உண்டு' என்பது பரவலான கருத்தாக இருந்தாலும், உடைகளில் கண்ணியம் காக்கும் நாடாகவும் தாய்லாந்து தன்னை முன்னிறுத்துகிறது.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT