Published : 14 Sep 2015 03:39 PM
Last Updated : 14 Sep 2015 03:39 PM
தாய்லாந்து சர்வதேச வைர நகை கண்காட்சியிலிருந்து திருடப்பட்ட சுமார் 2 கோடி மதிப்பிலான வைரம், சீனப் பெண்ணின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சைக்கு பின்னர் மீட்கப்பட்டது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வைர நகை கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் முதலீட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்துக் கொண்டனர். இதில் சீனாவைச் சேர்ந்த ஜியான் ஸூலியன் என்ற பெண் தனது நண்பருடன் பங்கேற்றார்.
வைர நகைகளை பார்வையிட்ட அவர் திடீரென மறைமுகமாக சில வைரங்களை வாயில் போட்டு விழுங்கினார். வைரத்தை அவர் கடத்தும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதனை பின்தொடர்ந்த கண்காட்சி அமைப்பாளர்கள் கேமராவில் பதிவான வீடியோ காட்டி அவர் மீது திருட்டு நடவடிக்கை எடுக்க முயற்சித்தனர்.
இதனிடையே, தனது நண்பருடன் தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல விமான நிலையம் சென்ற அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இருப்பினும் விசாரணையின்போது, வைரத்தை திருடியதாக ஜியான் ஒத்துக்கொள்ளாத நிலையில் அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
அதில் வைரம் தென்படவில்லை. ஆனால் வைரத்தை ஜியான் தான் கடத்தினார் என்பதை உரிமையாளர்கள் உறுதியாக கூறிய நிலையில், அவருக்கு (கோலனஸ்கோப்) பெருங்குடல் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவரது குடலில் வைரம் இருப்பது உறுதியானது.
தொடர்ந்து வைரத்தை இயற்கை உபாதைகள் மூலம் வெளியேற்ற அவருக்கு உரிய மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இருப்பினும் வைரம் வெளியேறாததை அடுத்து, அது அவரின் பெருங்குடலை கிழிக்கும் போக்கில் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து குடல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள அந்தப் பெண் சம்மதம் தெரிவித்தார்.
இந்த சிக்கலான அறுவை சிகிச்சை சுமார் 12 மணி நேரம் நடந்தது. இறுதியில் அவரது வயிற்றிலிருந்து 6 கேரட் அதாவது ரூ.2 கோடி மதிப்பிலான வைரம் மீட்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT