Published : 02 Jun 2020 08:53 AM
Last Updated : 02 Jun 2020 08:53 AM
கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரால் கழுத்தில் கால் வைக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் முழுவதும் பெரும் கலவரமாக மாறியுள்ளதையடுத்து, சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநில ஆளுநர்களை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.
“ நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு நானேதான் பொறுப்பு. மாநில ஆளுநர்கள் அமைதிைய நிலைநாட்டாமல் என்ன செய்கிறீர்கள்?அமைதியைக் கொண்டுவராவிட்டால், அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கிவிடுவேன் என அதிபர் ட்ரம்ப் கடுமையாக மிரட்டும் தொனியில் பேசினார்
அமெரிக்காவின் மினியாபோலீஸ் மாநிலம் மின்னசோட்டா நகர போலீஸ் அதிகாரி டேரிக் சாவின், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரைக் கையில் விலங்கு பூட்டி, கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்திருந்தார்.
தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் கூறிய பின்பும், டேரிக் சாவின் தொடர்ந்து அவரின் கழுத்தை மிதித்ததால் ஜார்ஜ் உயிரிழந்தார். இந்தக் காட்சியின் வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவின் கறுப்பின மக்களைத் தட்டி எழுப்பிவிட்டது. கடந்த திங்கள்கிழமை இச்சம்பவம் நடந்தது.
இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியதையடுத்து, போலீஸ் அதிகாரி டேரிக் சாவின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிராக இந்தச் சம்பவத்தைப் பார்த்து மக்கள் கொதித்தெழுந்தனர். மினியாபோலீஸில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா, வாஷிங்டன், ஓக்லஹோமா உள்பட 40 நகரங்களுக்குப் பரவியது.
அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் வன்முறையாக மாறி, மக்கள் கடைகளை சூறையாடுவதும், கொள்ளையடிப்பதும், வாகனங்களுக்கு தீவைப்பதும், போலீஸாரைத் தாக்குவதுமாக இறங்கினார். இதனால் பல இடங்களில் போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைக்குண்டுகள், பெப்பர் ஸ்ப்ரே, ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் போலீஸார் கூட்டத்தினரைக் கலைத்தனர்
வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகேயும் நேற்று முன்தினம் பெரும் போராட்டம் நடந்து, கூட்டத்தினரை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் போலீஸார் கலைத்தனர்.
இந்த சூழலில் நேற்று வாஷிங்டனில் பல்வேறு இடங்களில் ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிராகவும், கறுப்பினத்தவர்களுக்கு எதிராக இனவெறியுடன் நடப்பதற்கு எதிராகவும் போராட்டத்தில் இறங்கினர். இதனால் போலீஸார் போரட்டக்கரார்களை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், வானில் துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.
இந்த பெரும் களேபரங்களுக்கு மத்தியில் ரோஸ் கார்டனில் ஊடகங்களுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு எதிராக பல்வேறு நகரங்களில் மக்கள் நடத்தும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையால் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. மாநிலஆளுநர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்.
சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்துங்கள், போலீஸாருடன் சேர்ந்து தேசிய பாதுகாப்பு படையினரையும் பயன்படுத்துங்கள். சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பாலான ஆளுநர்கள் பலவீனமாக இருக்கிறீர்கள். வன்முறையில் ஈடுபடும் மக்ளை கைது செய்யுங்கள்.
நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு நானே பொறுப்பு. பல்வேறு நகரங்களில் நடக்கும் வன்முறைகளை மேயர்களும், ஆளுநர்களும் கட்டுக்குள் கொண்டுவந்து, மக்களின் உடைமைகளையும் உயிர்களையும் காக்காவி்ட்டால் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கி சிறிது நேரத்தில் அமைதியைக் கொண்டுவந்துவிடுவேன்.
ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மக்கள் அனைவரும் அமைதியிழந்து இருக்கிறார்கள். நிச்சயம் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு நீதி வழங்கப்படும்.
ஆனால், போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபடுவதை ஆளுநர்களும்,மேயர்களும் அனுமதி்க்கக்கூடாது.
வன்முறையில்ஈடுபடுவோரை கைது செய்யுங்கள், அவர்களைத் தேடி கண்டுபிடியுங்கள், 10 ஆண்டுகள் வரை சிறையில் அடையுங்கள். இதுபோன்ற கடினமான செயலை அவர்கள் பார்த்திருக்கூடாது. நீங்கள் வாஷிங்டன் நகரில் பணியாற்றுகிறீர்கள்
. மக்கள் இதற்கு முன் பார்க்காதவற்றை நாம் செய்ய வேண்டும்.சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸாருக்கு துணையாக தேசிய பாதுகாப்பு படையினரை இறக்காமல் ஆளுநர்கள் தங்களைத் தாங்களே முட்டாளாக்குகிறார்கள்.
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT