Published : 01 Jun 2020 08:24 AM
Last Updated : 01 Jun 2020 08:24 AM
எலான் மஸ்க்கின் "ஸ்பேஸ்எக்ஸ்" தனியார் நிறுவனம் தயாரித்த டிராகன் ஃபால்கான் ராக்கெட் சனிக்கிழமை 2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், 19 மணி நேரப் பயணத்துக்குப் பின் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று அடைந்தது.
இரு அமெரிக்க விண்வெளி வீரர்களான பாப் பெக்கென் (49), டாக் ஹர்லி (53)இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாசா விண்வெளி நிலையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ப்ளோரிடாவில் உள்ள கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சுமந்துகொண்டு அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3.22 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் ஃபால்கான் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா அரசுகள் மட்டுமே அனுப்பி இருந்தன. முதல் முறையாக தனியார் நிறுவனம் ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி வரலாறு படைத்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அமெரிக்க மண்ணிலிருந்து எந்த ராக்கெட்டையும் அனுப்பவில்லை. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க மண்ணிலிருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் நாசாவுக்கு முதல் முறையாக ஸ்பேக்எக்ஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை “எலான் மஸ்க்கிற்கு சொந்தமான " ஸ்பேஸ்எக்ஸ்"நிறுவனம் பெற்றது.
ஃபால்கான் ராக்கெட் ஏறக்குறைய 19 மணி நேரப் பயணத்துக்குப் பின் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று அடைந்தது. அந்த ராக்கெட்டில் பயணித்த இரு அமெரிக்க விண்வெளி வீரர்களான பெக்கென், ஹர்லி இருவரும் விண்வெளி நிலையத்துக்குள் தங்கள் வருகையைப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து நாசா விண்வெளி நிலையம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “மனித வரலாற்றில் முதல் முறையாக நாசா விண்வெளி வீரர்கள் தனியார் நிறுவனம் வர்த்தக ரீதியாக தயாரித்த ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்துள்ளார்கள். பெக்கென், ஹார்லி இருவரும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் ராக்கெட் மூலம் எங்களை அடைந்துள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் தாங்கள் அனுப்பிய டிராகன் ராக்கெட் மூலம் சென்ற இரு விண்வெளி வீரர்களும் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT