Published : 31 May 2020 09:38 AM
Last Updated : 31 May 2020 09:38 AM
போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 8 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவை தட்டி எழுப்பிவிட்டது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த ஒரு சம்பவம் மட்டும் காரணமல்ல அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் அங்கு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். மினியாபொலீசில் துவங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய இடங்களிலும் பல போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.
கரோனா லாக்டவுன் காலக்கட்டத்திலும் கருப்பரின் இறப்பு பெரிய போராட்டங்களை அங்கு கிளப்பியுள்ளது. போலீஸ் ஒருவர் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பரின மனிதனின் கழுத்தை தன் பூட்ஸ் காலினால் நெரித்த காட்சி வைரலானதையடுத்து மினியாபொலிசில் வன்முறை வெடித்து ஆங்காங்கே கடைகள் சூறையாடப்பட்டன. கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் உடைத்து எறியப்பட்டு கண்ணாடிச் சில்லுகள் சாலைகள் முழுதும் சிதறிக்கிடந்தன.
பல ஆண்டுகளாக கருப்பரினத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற குரல் ஓங்கத் தொடங்கி அமெரிக்காவின் தேசிய விவகாரமாக இது பூதாகாரம் எடுத்துள்ளது.
மக்கள் எதிர்ப்பெனும் பூகம்பம் வெடித்த வெள்ளிக்கிழமை இரவு பலதரப்பட்ட மக்களும் தெருவில் இறங்கி அமைதிவழியில் எதிர்ப்பைக் காட்டினர். முதல் நாள் போராட்டமும் அமைதியாகத்தான் தொடங்கியது, ஆனால் திடீரென வன்முறைகள் தொடங்கின.
நகரங்கள் வாரியாகத் தகவல்கள்
வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகிலேயே புலனாய்வு அமைப்புக்கு எதிராகவும் அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும் கடும் கோஷங்கள் எழுந்தன. பாதுகாப்பு தடுப்புகளையும் அவர்கள் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றனர். ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவு நிகழ்ச்சியில் பங்கேற்ற ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பி பத்திரிகையாளர்களிடம் பேசாமலேயே உள்ளே சென்றார்.
பிலடெல்பியாவில் அமைதி போராட்டம் வன்முறையாக மாற 13 போலீஸார் படுகாயமடைந்தனர். 4 போலீஸ் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. பல இடங்களிலும் ஆங்காங்கே தீவைப்பு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
ஓக்லஹாமாவின் துல்சா கிரீன்வுட் மாவட்டத்தில் உள்ள 1921 கறுப்பர்கள் படுகொலை நிகழ்ந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் கடுமையாக நடைபெற்றது. இங்கு 2016-ல் போலீஸ் அதிகாரியினால் கொல்லப்பட்ட கருப்பர் கிரட்சர் என்பவர்பெயரைக் குறிப்பிட்டு மக்கள் கோஷம் எழுப்பினர்.
லாஸ் ஏஞ்சலஸில் ‘கருப்பர் உயிர்கள் முக்கியம்’ என்ற கோஷங்கள் விண்ணைப்பிளந்தன. போலீஸார் தடியடி மற்றும் ரப்பர் புல்லட்களை பிரயோகித்தனர். அதே இடத்தில் போலீஸ் காரின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டது, ஒரு கார் எரிக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் தீ போல் பரவ 13 அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு அமலாகியுள்ளது. 16 நகரங்களில் இதுவரை 1400 பேர் கைது செய்யப்படனர். இதில் லாஸ் ஏஞ்சலஸில் மட்டும் 500 பேர் கைது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT