Published : 30 May 2020 08:44 PM
Last Updated : 30 May 2020 08:44 PM

ஆறுமுகன் தொண்டமானுக்குப் பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமான் தேர்தலில் போட்டி: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவு

குள.சண்முகசுந்தரம்/ அ.வேலுச்சாமி

இலங்கையில், மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்குப் பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராகக் களமிறக்கப்படுகிறார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அந்நாட்டின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்புத் துறை அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கடந்த 26-ம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார்.

கடந்த 1994 முதல் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக நுவரெலியா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். இலங்கையில் ஆட்சிக் குழப்பங்கள் ஏற்பட்ட ஒரு சில மாதங்கள் தவிர மற்ற காலங்களில் எல்லாம் தொடர்ந்து மத்திய அமைச்சராகவும் இருந்து வந்தார்.

இப்போது இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஜூன் 20-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்‌சவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன முன்னணியின் வேட்பாளராக நுவரெலியா தொகுதியில் மீண்டும் போட்டியிட இருந்தார் ஆறுமுகன் தொண்டமான். ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக அவரது மரணம் நிகழ்ந்து விட்டதால் அவருக்குப் பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமான் தேர்தல் களத்துக்கு வருகிறார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ஜீவன் தொண்டமான் தீவிர அரசியலுக்குள் இழுக்கப்பட்டார். வந்த வேகத்தில் மலையகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு செல்வாக்கை வளர்த்துக் கொண்ட ஜீவன், தற்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி பொதுச்செயலாளராக இருக்கிறார்.

தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து ஜீவன் தொண்டமானை மாற்று வேட்பாளராக களத்தில் இறக்க கட்சியின் உயர்மட்டக் குழு முடிவெடுத்திருக்கிறது. இந்த முடிவைக் கூட்டணியின் தலைவரான ராஜபக்சவிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள் எழுத்துபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆறுமுகன் தொண்டமானின் மருமகனான செந்தில் தொண்டமான் இலங்கையின் ஊவா மாகாணத்தின் துணை முதல்வராகவும் மூன்று மாதங்கள் பொறுப்பு முதல்வராகவும் இருந்தவர். இதுவரை மாகாண அரசியலில் மட்டுமே பங்காற்றி வந்த செந்தில் தொண்டமானை இம்முறை முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் களத்துக்குக் கொண்டு வந்தார் ஆறுமுகன் தொண்டமான். அதன்படி, ஊவா மாகாணத்தில் உள்ள பதுலா மாவட்ட நாடாளுமன்றத் தொகுதியில் செந்தில் தொண்டமானும் இம்முறை போட்டியிடுகிறார்.

இதனிடையே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அடுத்த தலைவர் என்ற பேச்சுகளும் விவாதங்களும் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டன. “ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான் இவர்களில் யார் தலைவராக வந்தாலும் மறுப்பேதும் சொல்லாமல் கட்சியின் மற்ற நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வார்கள். எனவே, கட்சியை யார் தலைமையில் கொண்டு செல்வது என்பதை அவர்கள் இருவரும்தான் தீர்மானிக்க வேண்டும்” என்கிறார்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர்.

ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான்

இருப்பினும் அரசியல் அனுபவமும் மூப்பும் கொண்ட செந்தில் தொண்டமான் கட்சியின் அடுத்த தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், “கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை தேர்தல் முடிந்த பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம். இப்போதைக்குத் தேர்தலைச் சந்திப்போம்” என்று கட்சியில் ஏகோபித்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஜீவன் தொண்டமானும் செந்தில் தொண்டமானும் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் இருவருக்குமே மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். இதனிடையே, மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் 1999-ம் ஆண்டு மே 26-ம் தேதி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது தாத்தா சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவனத் தலைவர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சமீபம், கண்ட்ரமாணிக்கம் அருகிலுள்ள எம்.புதூர் என்ற கிராமத்தில் பிறந்து இலங்கையில் செட்டிலானவர் செளமியமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x