Published : 30 May 2020 05:18 PM
Last Updated : 30 May 2020 05:18 PM
சீனாவின் கைப்பாவையாகச் செயல்படும் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேற உள்ளது. மிகப்பெரிய அளவில் தேவையாக இருக்கும் எந்தவிதமான சீர்திருத்தங்களையும் செய்யாமல், கரோனா வைரஸ் விவகாரத்தில் உலகைத் தவறாக வழிநடத்திவிட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து கரோனா வைரஸ் உருவாகி இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்காதான் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அந்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 17 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்து உருவானது. சந்தையில் உருவாகவில்லை என்று அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் சீனாவுடன் கூட்டு சேர்ந்து உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ் குறித்த விவரங்களை உலகிற்கு கூறாமல் மறைத்துவிட்டது என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனன் மீது ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்புக்கு ஆண்டு தோறும் வழங்கும் 450 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியையும் நிறுத்தி உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் கரோனா வைரஸ் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்து உலக சுகாதார அமைப்பு செயல்பட்ட விதம் குறித்து சுயசார்பு விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் விதித்த கோரிக்கையையும் உலக சுகாதார அமைப்பு ஏற்றது.
ஆனால், நிதியுதவியை மட்டும் நிறுத்த வேண்டாம் எனக் கோரியது. கரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் இப்போது நிதியுதவியை நிறுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அதன் தலைவர் டெட்ரோஸ் கோரிக்கை விடுத்தார்.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ் விவகாரத்தை தவறாகக் கையாண்டு, பல்வேறு தகவல்களை மறைத்து, உலகைத் தவறாக வழிநடத்திவிட்டது. கரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்பதை நிரூபிப்பதில் உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது.
சீனாவின் சொல்படி கேட்கும், அதன் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு மாறிவிட்டது. ஏனென்றால், காலத்துக்கு தேவையான மிகப்பெரிய சீர்திருத்தங்களை செய்யக் கோரியும் அதை உலக சுகாதார அமைப்பு செய்யவில்லை.
ஆதலால், உலக சுகாதார அமைப்புடன் இருக்கும் உறவை ஒட்டுமொத்தமாக துண்டிக்கப் போகிறோம். அந்த அமைப்புக்கு வழங்கும் நிதி அனைத்தையும் உலக அளவில் தேவையுள்ள நாடுகளுக்கும், மக்களின் சுகாதாரத்துக்கும் வழங்க இருக்கிறோம்.
கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவிடம் இருந்து வெளிப்படைத்தன்மையை உலகம் எதிர்பார்க்கிறது, பதிலை எதிர்நோக்குகிறது. சீனா பரப்பிவிட்ட கரோன வைரஸால் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹாங்காங் மீது புதிய கட்டுப்பாடுகளை சீனா விதிப்பதால் ஹாங்காங்கிற்கு வழங்கிய சிறப்பு உரிமைகளை ரத்து செய்வோம். ஹாங்காங்கில் இருந்து வருவோருக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அமெரிக்காவில் சீனா நிறுவனங்கள் முதலீடு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்படும். சீன மக்கள் வந்து செல்ல விதிமுறை கடினமாக்கப்படும்.
சீன அரசின் பொறுப்பற்ற தன்மையால்தான் உலகம் முழுவதும் கரோனாவால் வேதனைப்படுகிறது. கரோனா வைரஸை சீனா மூடி மறைத்து உலகம் முழுவதும் பரவ அனுமதித்தது. உலக சுகாதார அமைப்பு சரியான நேரத்தில் செயல்பட்டிருந்தால், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வரும் மக்களுக்கு நான் தடை விதித்திருப்பேன்.
உலக சுகாதார அமைப்புக்கு 4 கோடி டாலர்கள் மட்டுமே சீனா நிதியுதவி அளிக்கிறது. ஆனால், 45 கோடி நிதியை அமெரிக்கா வழங்குகிறது.
கரோனா வைரஸ் விவகாரத்தில் உலகை தவறாக வழிநடத்திய உலக சுகாதார அமைப்புடனான உறவைத் துண்டிக்கப்போகிறோம்''.
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்
அமெரிக்க எம்.பி.க்கள், மருத்துவ வல்லுநர்கள் அதிபர் ட்ரம்ப்பின் முடிவால் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
அமெரிக்க மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் பாட்ரிஸ் ஹாரிஸ் கூறுகையில், “அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்பு அறிவில்லாததைக் காட்டுகிறது. மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். உலகமே கரோனாவை எதிர்த்துப் போராடும் போது, ட்ரம்ப்பின் அறிவிப்பு கரோனாவுக்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்யும்” என விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT