Published : 30 May 2020 06:32 AM
Last Updated : 30 May 2020 06:32 AM
இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் (ஓஐசி) மாலத்தீவு, ஐக்கியஅரபு அமீரகம் உள்ளிட்ட 57 இஸ்லாமிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஓஐசி மாநாடு சமீபத்தில் நடந்த போது, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு (இஸ்லாமோபோபியா) நிலவுகிறது. எனவே, இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு ஆதரவாக மாலத்தீவு பிரதிநிதி திட்டவட்டமாகப் பேசினார். ‘‘இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய மதம் உள்ளது. மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவில் 2-வது பெரிய மதமாக இஸ்லாம் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஓஐசி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் மாலத்தீவு ஆதரிக்காது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஓஐசி போலவே ஐ.நா.வில் பாகிஸ்தானின் நிரந்தரப்பிரதிநிதியாக உள்ள முனிர் அக்ரம்கூட்டத்தில் பேசும்போது, ‘‘இந்தியாவில் முஸ்லிம்கள் வேதனைகளை அனுபவிக்கின்றனர். முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வும் விரோதப்போக்கும் அதிகம் காணப்படுகிறது. இதை கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் கையாண்ட முறையை கவனித்தால் தெரியும். காஷ்மீரிகள் அல்லாதோரை காஷ்மீருக்கு குடியேற வைத்து முஸ்லிம்களின் பெரும்பான்மை ஒடுக்கப்படுகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மாலத்தீவும், ஐக்கிய அரபு அமீரகமும் ஏற்க மறுத்ததால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்ததாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பிரபல ‘டான்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா.வின் மாலத்தீவுக்கான நிரந்தர பிரதிநிதி தில்மீசா உசைன் பேசுகையில், ‘‘அரசியல் ரீதியிலோ அல்லது வேறு எந்த வகையிலோ வன்முறை அல்லது மதம் மீது வெறுப்பை தூண்டினால் அதை மாலத்தீவு உறுதியுடன் எதிர்க்கும். ஆனால் ஒரு நாட்டை மட்டும் இலக்கு வைத்து பேசுவது சரியானதாகாது. அது உண்மையான பிரச்சினைகளை ஒரங்கட்டுவது போன்றதாகும்’’ என்று கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதிநிதி பேசும்போது, ‘‘பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு தராது. இது போன்ற குழுவை வெளியுறவு அமைச்சர்கள் வேண்டும் என்றால் ஆலோசித்து உருவாக்கலாம். அவர்களுக்குதான் இந்த அதிகாரம் உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT