Last Updated : 21 Aug, 2015 03:20 PM

 

Published : 21 Aug 2015 03:20 PM
Last Updated : 21 Aug 2015 03:20 PM

எல்லையில் தொடரும் சண்டை: போருக்குத் தயாராகிறது வட கொரியா- பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு தென் கொரியா உத்தரவு

தென் கொரியா மீது எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி தனது ராணுவத்துக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். எல்லையில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேற்கண்ட உத்தரவை கிம் ஜோங் உன் பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து எல்லை யோரத்தில் வசிக்கும் மக்களை தென் கொரியா வெளியேற்றி வருகிறது. ராணுவ தளபதிகளுடன் தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக தென் கொரியா- வட கொரியா எல்லையில் இரு ராணுவத்தினரும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தென் கொரியா, எல்லை யோரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் கம்யூனிஸ மற்றும் வடகொரிய எதிர்ப்பு பிரச்சாரத்தை நிறுத்திக் கொள் ளும்படி வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு செய்வதற்கு சனிக் கிழமை மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கி வாயிலான பிரச்சாரத்தை தென் கொரியா மீண்டும் தொடங்கியதால்தான் வட கொரியா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது நடந்து வரும் அறிவிக்கப்படாத சண்டையைத் தொடர்ந்து மேற் கொள்ளும்படி எல்லையோரத்தில் இருக்கும் படைகளுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

அவசரகால ராணுவ கூட்டத் தைக் கூட்டிய அவர், போர் கால நடவடிக்கைகளுக்கு தயாராகவும், வெள்ளிக்கிழமை மாலை முதல் எந்த நேரமும் தாக்குதலில் ஈடுபடும் வகையில் முழு ஆயத்த நிலையில் இருக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியா தாக்குதல் நடத்தி னால், முழு பலத்துடன் பதில் தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு தென் கொரியா உத்தரவிட்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கு இடையேயும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, போர் பதற்றத்தைத் தவிர்க்க சீனாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது. வட கொரியாவுக்கு உறிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என சீனாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x