Published : 26 May 2020 05:10 PM
Last Updated : 26 May 2020 05:10 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 779 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு அமைச்சகம் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 779 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,086 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரான துபாயில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. மேலும், பொழுதுபோக்கு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஐக்கிய அரபு அமீரக அரசின் விதிகளுக்கு உட்பட்டு வணிக நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அதிகமான கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதுமான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுசெய்ய பல்வேறு நடவடிக்கைகளையும், நிதித் திட்டங்களையும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT