Published : 25 May 2020 07:14 AM
Last Updated : 25 May 2020 07:14 AM
சீனாவின் வூஹான் நகரில்உள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ‘‘கரோனா வைரஸ் குறித்து சீனா உண்மைகளை மறைக்கிறது. நிபுணர்கள் குழு விசாரணையை மறுக்கிறது. கரோனாவால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. அதற்கு சீனா பதில் சொல்லியாக வேண்டும். நாங்கள் உண்மையைக் கண்டுபிடிப்போம். சீனா அதற்கு பதில் சொல்லியாக வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீனாவுடனான உறவை, புதிய பனிப்போரின் விளிம்புக்கு அமெரிக்கா தள்ளிவிடுகிறது. அமெரிக்காவில் உள்ள சில அரசியல் சக்திகள், சீனா - அமெரிக்கா உறவை சீர்கெடுக்க முயற்சிக்கின்றன. இருநாடுகளுக்கு இடையில் புதிய பனிப்போரை உருவாக்க முயற்சிக்கின்றன.
சீனாவின் பெயரை சர்வதேசஅளவில் கெடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. சீனாவுக்கு எதிராக பொய் தகவல்களைப் பரப்பி வருகிறது. கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக ‘அரசியல் வைரஸ்’ பரப்பப்படுகிறது. இந்த அரசியல் வைரஸை சீனாவுக்கு எதிராக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள சில அரசியல்வாதிகள், அடிப்படை உண்மைகளை புறந்தள்ளி, சீனாவுக்கு எதிராக பல்வேறு பொய் செய்திகளைப் பரப்பி சதி வேலையில் ஈடுபடுகின்றனர். அது எங்கள் கவனத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு வாங் யி கூறினார்.
ஆனால், அமெரிக்காவில் எந்த அரசியல் சக்தி என்று வாங் யி குறிப்பிடவில்லை.
ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருநாடுகளுக்கு இடையில் வர்த்தகபோர் நடைபெற்றது. இரு நாடுகளும் வரிகளை உயர்த்தின. அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம்சமாதானம் அடைந்து வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டன. மேலும், ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி போராடுபவர்களை சீனா நசுக்கி வருகிறது. அங்கு மனித உரிமை மறுக்கப்படுகிறது என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா - அமெரிக்கா இடையேஉள்ள உரசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT