Published : 23 May 2020 11:09 AM
Last Updated : 23 May 2020 11:09 AM
கரோனா காலத்தில் எவ்வவோ வினோதங்களைப் பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் பலரும் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் மனிதர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் காதலுக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் குறைவில்லை!
அமெரிக்காவின் நியூயார்க் மாவட்டத் தலைநகரான அல்பானியில் வசித்து வருபவர் 85 வயது ராபர்ட் பாப்பர். அவர் தனது காதல் மனைவிக்கு இப்படியொரு நெருக்கடி வரும் என்று நினைத்திருக்க மாட்டார். அவரது மனைவியான 80 வயது லாரா, அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அல்சைமர் நோய் என்பதால் மறதி காரணமாக என்ன செய்வது என்று தடுமாறும் தன் மனைவிக்கு கடந்த ஒரு வருடமாக மருத்துவ மனையில் கண்களை இமை காப்பதுபோல் அருகிலேயே துணையாக இருந்து வந்தார். ஆனால், கரோனா அவரை மனைவியிடமிருந்து வெளியே துரத்திவிட்டது. கரோனா பரவல் வேகமெடுத்ததும் ராபர்ட் பாப்பரிடம் மருத்துவமனை நிர்வாகம், ‘உங்கள் மனைவியின் சிகிச்சையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவருக்கோ உங்களுக்கோ கரோனா தொற்று இல்லையே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். உடனே நீங்கள் வீட்டுக்குப் போய்விடுங்கள். நகர நிர்வாகத்துக்கு நாங்கள் பதில்சொல்ல முடியாது” என்று கூறி அவரை வெளியே அனுப்பியதுடன் மருத்துவமனை உள்ளே நுழையவும் தடை விதித்துவிட்டது.
60 வருட தாம்பத்ய வாழ்க்கை நடத்திய ராபர்ட் இதை ஒப்புக்கொள்வாரா? இன்னமும் தன் மனைவி மாறாக் காதலுடன் இருந்த ராபர்ட் ஒரு முடிவு எடுத்தார். தினமும் மருத்துவமனைக்குச் சென்று தன் மனைவி தங்கியிருக்கும் அறைக்கு வெளியே இருக்கும் இடத்தில் கஷ்டப்பட்டு அமர்ந்துகொண்டு, தினமும் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே இருந்து அவரைப் பார்த்துப்பேசி, அவர்களின் கடந்த காலத்தை நினைவூட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். இதை வீடியோ எடுத்து அவரது பேத்தி சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அது பெரிய வரவேற்பை பெற்றுவிட்டது.
அவரது பேத்தி அலிசியா, தற்போது அல்சைமர் வியாதி நோய்க்கான ஆராய்ச்சியில் முனைவர் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருக்கிறார். ‘தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதால் தான் இந்த நோயை குணப்படுத்த முயல்வேன் என்று சபதம் ஏற்று இருக்கிறார்’. அமெரிக்காவில் அன்பும், காதலும் பாசமும் போலி என்று இனி யாரும் விமர்சிக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT