Last Updated : 19 May, 2020 11:20 AM

 

Published : 19 May 2020 11:20 AM
Last Updated : 19 May 2020 11:20 AM

கரோனா வைரஸ் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் மருந்து, வாக்சைன் தேவையில்லை: சீன பீகிங் பல்கலை. ஆய்வாளர்கள் உற்சாகம்

கரோனா வைரஸ் எனும் அனைத்துலக மக்கள் பெருந்தொற்றுப் பரவலை முடிவுக்குக் கொண்டு வரும் மருந்து ஒன்றை தயாரித்து வருவதாக சீன பரிசோதனைக் கூடம் ஒன்று உரிமை கோரியுள்ளது, வாக்சைனும் தேவையில்லையாம்.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வாக்சைன்கள் ஆங்காங்கே சோதனையில் உள்ளன, இப்போதைக்கு மருந்து என்ற வகையில் தீவிர கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவைர் மற்றும் ஹைக்ட்ராக்சிகுளோரோகுயின் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவின் மதிப்பு மிக்க பீகிங் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சோதனை செய்து வரும் ஒரு மருந்து கரோனா நோயாளிகள் குணமடையும் கால அளவை பெரிய அளவில் குறைப்பதாகவும், ஒரு குறுகிய கால நோய்த்தடுப்பு சக்தியாகவும் செயல்படுவதாக தெரிவிக்கின்றனர்.

பீகிங் பல்கலைக் கழகத்தின் பெய்ஜிங்கில் உள்ள அட்வான்ஸ்டு இன்னொவேஷன் செண்டர் இயக்குநர் சன்னி ஷீ என்பவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது இந்த மருந்து விலங்கு பரிசோதனையில் தேறிவிட்டது என்றார்.

“வைரஸ் தொற்று பாதித்த எலிக்கு நாங்கள் அதை செயலிழக்கச் செய்யும் ஆன்ட்டிபாடிக்களை கொடுத்தோம் 5 நாட்களுக்குப் பிறகு வைரஸ் சுமை பெரிய அளவில் குறைந்திருந்ததைக் கண்டோம், எனவே இந்த எதிர்கால மருந்துக்கு சிகிச்சை சக்தி இருக்கிறது என்றே பொருள்” என்றார்.

மனித உடல் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாக்கும் ஆன்ட்டிபாடிக்களை கரோனாவிலிருந்து மீண்ட 60 பேரிடமிருந்து எடுத்தோம் இதைத்தான் எலிப்பரிசோதனை செய்தோம் பெரிய அளவில் கரோனாவுக்கு இதில் சிகிச்சை இருப்பதாக உணர்கிறோம் என்றார் சன்னி ஷீ.

இத்தகைய ஆண்ட்டிபாடிக்காக இராப்பகலாக உழைத்து வருகிறோம் என்றார் அவர். எங்களுடையது ஒற்றை செல் மரபணுவியலாகும், நோய் எதிர்ப்பாற்றலியலோ வைரலியலோ அல்ல. ஒற்றை செல் மரபணு அணுகுமுறை, வைரஸை செயலிழக்கச் செய்யும் ஆன்ட்டிபாடிகளை கண்டுபிடிக்க முடியும் என்பதைக் கண்டு நாங்கள் உண்மையில் உற்சாகமடைந்தோம். இந்த ஆண்டின் இறுதியில் இந்த மருந்து தயாராகி விடும்.

குளிர்கால மீள் கரோனா தாக்குதலுக்குள் இது பயன்பாட்டுக்கு வரும் என்று சன்னி ஷீ தெரிவித்தார்.

இந்த ஆன்ட்டிபாடிஸ் நிச்சயம் அனைத்துலக கரோனா தோற்றை தடுக்கும் சிறப்பு மருந்தாகும் என்று நம்புவதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சீனா ஏற்கெனவே 5 எதிர்கால வாக்சைன்களை மானுட சோதனைக் கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது.

ஆனாலும் வாக்சைன் உருவாக்க ஓராண்டு முதல் ஒன்றரை இரண்டாண்டுகள் ஆகலாம் என்று உலகச் சுகாதார அமைப்பு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

சீனாவில் 700 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வேலை செய்துள்ளது, ஆனால் அது அதிகம் கிடைப்பதில்லை. தங்கள் மருந்தில் பயன்படுத்தப்பட்ட கரோனாவைச் செயலிழக்கச் செய்யும் 14 ஆன்ட்டிபாடிகள் விரைவில் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும், வாக்சைன் இல்லாமலேயே இந்த மருந்தை அகில உலக கரோனா தொற்றை தடுக்கப் பயன்படுத்தலாம் என்கிறார் சன்னி ஷீ.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x