Published : 16 May 2020 11:40 AM
Last Updated : 16 May 2020 11:40 AM
சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் நிறுவனம் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், செமிகன்டக்டர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை நேற்று விதித்துள்ளது.
கரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவியதற்கு சீனாதான் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இப்போதுள்ள நிலையில் பேச விரும்பவில்லை, எதிர்காலத்தில் பல்வேறு வரி உயர்வை விதிப்போம் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்த சூழலில் சீனாவுக்கு மறைமுகமாக நெருக்கடி தரும் வகையில், அமெரிக்காவில் செயல்படும் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு அமெரிக்கத் தொழில்நுட்பங்களையும், செமிகன்டக்டர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்தப் புதிய கட்டுப்பாடுகள் நிச்சயம் சீனாவுக்கு ஆத்திரத்தையும், அழுத்தத்தையும் வரவழைக்கும். நிச்சயம் வரும் நாட்களில் சீனாவிடம் இருந்து கடுமையான பதிலடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் உள்ள பெரும்பாலான செமிகன்டக்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமெரிக்காவில்தான் இருக்கின்றன. இங்கிருந்துதான் உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் செயல்படும் பல நிறுவனங்கள் சீனாவின் ஹூவாய், ஹாய்சிலிகான் நிறுவனங்களுக்கு செமிகன்டக்டர்களை வழங்குவதைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக சீனாவின் ராணுவத் தளவாடங்களுக்கு தேவைப்படும் சிப்புகள், சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சிப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்
இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர ரோஸ் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “அமெரிக்கா ஏற்கெனவே விதித்துள்ள கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவே இந்த ஹூவாய் நிறுவனத்துக்கு புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை ஹூவாய் நிறுவனம் பெருமளவு பயன்படுத்தி வந்தது. இதற்கு சட்டத்தின் ஓட்டைகளே காரணமாக இருந்தன. அதைச் சரி செய்யவே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய விதிகளின்படி அமெரிக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சீனாவின் ஹூவாய் நிறுவனம், உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் செமிகன்டக்டர்களை தன்னுடைய நாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிகாரிகளிடம் இனிமேல் அனுமதி பெற வேண்டும்.
ஹூவாய் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சீன நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு தடைவிதித்தது. பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதால் கொண்டுவரப்பட்ட அந்த உத்தரவும் தொடரும்” எனத் தெரிவித்தார்.
இந்தப் புதிய உத்தரவு கரோனாவைப் பரப்பிய சீனாவின் மீதான அமெரிக்காவின் கோபத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் மூலம் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை அனுமதியின்றி இனிமேல் ஹூவாய் நிறுவனம் பயன்படுத்த முடியாது, செமிகன்டக்டர்களையும் தயாரிக்க முடியாது, ஏற்றுமதி செய்ய முடியாது. இது ஹூவாய் நிறுவனத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், சீனாவை மேலும் ஆத்திரமூட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT