Published : 15 May 2020 01:22 PM
Last Updated : 15 May 2020 01:22 PM
பிரிட்டன் மக்கள்தொகையில் சுமார் 25% பேர் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த ஆய்வில் மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். இதன் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “மார்ச் மாதம் முதல் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மார்ச் மாதத்தின் நடுவில் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தீவிரமாக இருந்தது. கரோனா தொற்று சிறு குழுக்களாக உள்ளவர்களிடம் தீவிரமாகப் பரவுகிறது. இதுவே பெரிய கூட்டத்தில் உள்ள குழுவில் அறிகுறிகளற்ற நோய்த்தொற்று காணப்படுகிறது.
இதன் ஆய்வின்படி பிரிட்டனில் சுமார் 25% பேர் (ஊரடங்குக்கு முன்னரே) ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். சமூக விலகல், ஊரடங்கைப் பின்பற்றாமல் இருந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.
ஜூன் 1-ம் தேதிக்குள் கரோனா நோய்த்தொற்று குறைந்துவிடும் சூழலில் பள்ளிகளும், கடைகளும் படிப்படியாகத் திறக்கப்படும். அதேசமயம் மக்கள் அதிகமாகக் கூடும் சில முக்கிய இடங்கள் ஜூலை 1-ம் தேதி தான் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா தொற்றால் 2,33,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,614 பேர் பலியாகினர். பிரிட்டனில் இதுவரை 32 லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் 45, 27,127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,02,000 பேர் பலியாகி உள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT