Last Updated : 13 May, 2020 06:45 PM

 

Published : 13 May 2020 06:45 PM
Last Updated : 13 May 2020 06:45 PM

ஓர் உயிரைக்கூட இழக்கவில்லை!- கரோனாவைக் கட்டிப்போட்ட வியட்நாமின் வெற்றிக் கதை

கரோனா பொதுமுடக்கத்திலிருந்து வெற்றிகரமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது வியட்நாம். பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. மோசமான பொருளாதார அழிவுகளிலிருந்து நாடு வெளியேறிவிடும் எனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று வாசலிலேயே பரிசோதிக்கிறார்கள் சுகாதார அதிகாரிகள்.

வியட்நாமில் இதுவரை 288 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுளது. இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இவ்விஷயத்தில் வியட்நாம் அரசின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் விரிவாகவும் வெளிப்படையாகவும் செய்திகளை வெளியிடுகின்றன. அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளால்கூட சாதிக்க முடியாததை வியட்நாம் சாதித்ததன் பின்னணி குறித்து உலக அளவில் விவாதங்கள் நடக்கின்றன.

போதாமையை உணர்ந்துகொண்ட தேசம்
9 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு வியட்நாம். சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நில எல்லை 1,400 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது. இதனால், கரோனா தொற்று அபாயம் அதிகம் கொண்ட நாடாகவே வியட்நாம் கருதப்பட்டது. எனினும், வியட்நாம் மேற்கொண்ட ஆக்கபூர்வ நடவடிக்கைகள் அந்த எண்ணத்தை அடியோடு மாற்றின.

வியட்நாமில் மருத்துவ ரீதியிலான வசதிகள் குறைவு என்பது கவனிக்கத்தக்க விஷயம். இப்படியான ஒரு சூழலில் கரோனா தொற்று பரவத் தொடங்கினால் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும் என்பதை வியட்நாம் அரசு ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டது. இதனால், ஜனவரி மாதத்திலிருந்தே கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்கத் தொடங்கியது.

‘இது சாதாரணக் காய்ச்சல். பயப்பட வேண்டியதில்லை’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்காமல், கரோனா அறிகுறிகள் குறித்தும், அதற்கான பரிசோதனைகளை எங்கு செய்துகொள்ளலாம் என்பது குறித்தும் மக்களுக்குத் தெளிவாக அறிவித்துவிட்டது அரசு.

ஜனவரி 22-ல், வியட்நாமில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக, கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய வழிநடத்தும் குழுவை உருவாக்கியது வியட்நாம் அரசு. அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அக்குழுவுக்குத் தலைமை வகித்தார். சீனாவுக்கு வெளியே, பிற எந்த நாட்டையும்விட முன்னதாகவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது வியட்நாம்தான்.

சார்ஸ் அனுபவம் தந்த பாடம்
2003-ல், சார்ஸ் வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் ஒன்று. அப்போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கரோனாவையும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியிருக்கிறது வியட்நாம். 2003 ஏப்ரல் 8-ம் தேதி வாக்கில், வியட்நாமில் 63 பேர் சார்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தனர். 5 பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த வியட்நாம் அரசு, உடனடியாக அதற்காக ஒரு பணிக்குழுவை உருவாக்கியது. சார்ஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை, அப்போதைய பிரதமர் பான் வான் காய்க்கு நேரடியாக அளித்துவந்தார் சுகாதாரத் துறை அமைச்சர். போக்குவரத்துத் துறை, சுங்கத் துறை, நிதித் துறை, கல்வித் துறை, உள்துறை என்று எல்லா துறைகளையும் உள்ளடக்கிய நடவடிக்கைகளை வியட்நாம் அரசு எடுத்தது.

அந்தக் கூட்டுழைப்பு கைகொடுத்தது. வியட்நாமை சார்ஸ் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய முதல் நாடு என்று 2003 ஏப்ரல் 28-ல் அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். “சார்ஸ் வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலகத்துக்கே காட்டியிருக்கிறது வியட்நாம்” என்று அந்நாட்டுக்கான உலக சுகாதார நிறுவனச் சிறப்புத் தூதர் பாஸ்காலே புரூடான் பாராட்டினார்.

ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள்
கரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் இதுபோன்ற வழிமுறைகளை வியட்நாம் மேற்கொண்டது. பிப்ரவரி 1-லேயே சீனா, ஹாங்காங், தைவானிலிருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டன. எல்லைகள் மூடப்பட்டன. மார்ச் 21-ல் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இப்படி ஆரம்பக் கட்டத்திலேயே தீர்க்கமான நடவடிக்கைகளை வியட்நாம் எடுத்ததால்தான் கரோனா வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்தது என்று சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆயிரக்கணக்கானோரைத் தனிமைப்படுத்தியது, பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, கரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களைக் கண்டறியும் வழிமுறையை நடைமுறைப்படுத்தியது என்று பல்வேறு நடவடிக்கைகளை வியட்நாம் அரசு எடுத்தது. ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டால், அவருடன் தொடர்புடையவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தாமல், அவர்களையும் அரசு மருத்துவமனைகள் அல்லது மருத்துவ முகாம்களில் தங்கவைத்தது. இதனால், வீட்டில் இருக்கும் முதியவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்கப்பட்டது. தொற்றுக்குள்ளானவர்களின் தொடர்புகளைத் தடமறிவதிலும் துரிதமாகச் செயல்பட்டது.

குறைந்த செலவில் பரிசோதனை
மார்ச் தொடக்கத்திலேயே கரோனா பரிசோதனை சாதனங்களைக் குறைந்த விலையில் உருவாக்கிவிட்டார்கள் வியட்நாம் விஞ்ஞானிகள். அதிகச் செலவு பிடிக்கும் பரிசோதனை முறைகளைவிட, குறைந்த செலவிலான பரிசோதனை முறைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தது வியட்நாம் அரசு. ஜனவரியில் அந்நாட்டில் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை வெறும் 3 தான். ஏப்ரல் மாதம் அது 112 ஆக உயர்ந்தது.

கரோனா தொற்று அதிகம் காணப்பட்ட ஹனோய் நகரச் சந்தைகளுக்குச் சென்றுவந்தவர்களுக்கு அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஏப்ரல் இறுதியில், 2.60 லட்சம் பரிசோதனைகளை வியட்நாம் நடத்தியிருந்தது.

தேசபக்தி எனும் ஆயுதம்
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவே மூன்று முறை முயற்சிக்க வேண்டியிருந்தது வியட்நாமுக்கு. அம்முயற்சியில் இரண்டு முறை தோல்வியடைந்ததை அடுத்து, 2007-ல் அதை நடைமுறைப்படுத்த தீவிர நிலைப்பாட்டை எடுத்தது வியட்நாம் அரசு. இதற்கிடையே, 2.50 டாலர் மதிப்பிலான பிளாஸ்டிக் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு, அபராதத்திலிருந்து தப்பிக்கும் வேலைகளில் மக்கள் இறங்கிவிட்டார்கள்.

எனினும், கரோனா விஷயத்தில் மக்கள் அரசின் உத்தரவுகளுக்குச் செவிமடுத்தார்கள். கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், மக்களின் தேசபக்தியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியிருப்பது வியட்நாமின் வித்தியாசமான அணுகுறையைக் காட்டுகிறது. ‘வீட்டில் இருப்பது என்றால் உங்கள் நாட்டை நீங்கள் நேசிப்பது போன்றது’, ‘தனிமனித இடைவெளி என்பது தேசபக்தியின் ஒரு வடிவம்தான்’ என்றெல்லாம் கோஷங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது வியட்நாம் அரசு. ‘கரோனா வைரஸ் உங்கள் எதிரி’ எனும் வாசகத்தை மக்கள் மனதில் ஆழப் பதியச்செய்தது அரசு. அது நல்ல பலன்களைத் தந்தது.

வெளிப்படையான நடவடிக்கைகள்
கரோனா தொற்று தொடர்பாக வியட்நாம் வெளியிட்டிருக்கும் தரவுகள் முழுமையானவை அல்ல என்றோ போலியானவை என்றோ சிலர் கருதலாம். காரணம், ஒரே கட்சியின் ஆட்சி நடக்கும் அந்த தேசத்தில், ஊடகச் சுதந்திரம் கிடையாது. அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் எழுதினாலோ, வீதிகளில் போராடினாலோ சிறைவாசம் நிச்சயம். அதையெல்லாம் தாண்டி, கரோனா விஷயத்தில் வியட்நாம் அதிகாரிகள் நேர்மையுடன் செயல்படுகிறார்கள் என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

வியட்நாம் பொருளாதாரத்தில் சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்நாட்டின் ஜிடிபியில் சுற்றுலாவின் பங்கு கிட்டத்தட்ட 8 சதவீதம். இந்நிலையில், சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் வியட்நாம் சுற்றுலாத் துறை கடுமையான இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. எனினும், இப்போதைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கான தடையை வியட்நாம் விலக்கிக்கொள்ளவில்லை. மாறாக, விவசாயம், மருந்து உற்பத்தி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. அத்துடன் தொழில் துறையில் சீனாவைச் சார்ந்திருந்த பல நிறுவனங்களின் கவனம் வியட்நாம் பக்கம் திரும்பியிருக்கிறது.

அதேசமயம், “கரோனா அபாயம் இப்போது குறைந்திருப்பது நல்ல விஷயம். எனினும், நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று வியட்நாம் பிரதமர் நியுவென் ஷுவான் ஃபுக் கூறியிருக்கிறார். கரோனாவை வென்றுவிட்டோம் என்றெல்லாம் வெற்று முழக்கமிடாமல் நிதானமாகச் செயல்படுவதுதான் வியட்நாமின் முக்கிய வெற்றி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x