Published : 12 May 2020 05:02 PM
Last Updated : 12 May 2020 05:02 PM
கரோனா வைரஸ் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலளிக்காமல் பாதியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவப் பரிசோதனைகள் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகிறார்.
அப்போது ட்ரம்ப், ''மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைகள் இரண்டு மடங்கு நடத்தப்படுகின்றன. கடந்த வாரம் 1,50,000 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது 3 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன'' என்று தெரிவித்தார்.
அப்போது ட்ரம்ப்பைக் குறுக்கிட்ட பெண் பத்திரிகையாளர் காலின்ஸ் என்பவர், ''அமெரிக்கர்கள் இங்கு ஒவ்வொரு நாளும் மடிந்து கொண்டிருக்க நீங்கள் உலக நாடுகளுடன் ஏன் போட்டி போட்டுக் கொண்டிருக்கீறிர்கள்'' என்று கேட்டார்.
அதற்கு ட்ரம்ப் பதிலளிக்கையில், ''நீங்கள் இந்தக் கேள்வியை சீனாவை நோக்கிக் கேட்க வேண்டும்'' என்றார். தொடர்ந்து, அடுத்த பத்திரிகையாளரைக் கேள்வி கேட்கச் சொன்னார். ஆனால், பத்திரிகையாளர் காலின்ஸ் அதிபர் ட்ரம்ப்பிடம் மீண்டும் கேள்வி கேட்ட முற்பட்டார். ஆனால், ட்ரம்ப் பதிலளிக்காமல் பாதியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.
அமெரிக்காவில் மட்டும் 13,85,834 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 81,795 பேர் பலியாகி உள்ளனர். 2,62,225 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 96,19,855 பேருக்கு கரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 42, 56,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 15, 27,517 பேர் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT