Published : 11 May 2020 09:03 PM
Last Updated : 11 May 2020 09:03 PM

ஏவுகணைப் பயிற்சியின்போது தவறுதலாக தாக்குதலுக்குள்ளான ஈரானிய போர்க் கப்பல்: 19 மாலுமிகள் பலி; 15 பேர் காயம்

தெஹ்ரான்

ஈரானிய போர்க் கப்பல் ஒன்று ஏவுகணைப் பயிற்சியின்போது தாக்குதலுக்குள்ளாகியதில் 19 மாலுமிகள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள், “ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்தில் இருந்த கோனாரக் என்ற ஈரானிய போர்க் கப்பல், ஜமானாரன் என்ற மற்றொரு கப்பலில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைப் பயிற்சியின்போது தவறுதலாக தாக்குதலுக்குள்ளானது. அதிலிருந்த 19 மாலுமிகள் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்.

அக்கப்பலை மீட்கச் செல்வதற்கு முன்னே அது முற்றிலும் உருக்குலைந்து மூழ்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதனை கரைக்கு எடுத்துவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

2016-ம் ஆண்டில் தைவான் போர்க்கப்பல் ஒன்று தவறுதலாக மற்றொரு கப்பலைத் தாக்கியதில் அதன் கேப்டன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட்ட போர்க் கப்பலான கோனாரக், 447 டன் எடையும், 47 மீட்டர் நீளமும் உடையது. 1988 முதல் ஈரான் கடற்படையில் செயல்பாட்டில் உள்ளது.

ஏற்கெனவே ஈரான் கடல் பகுதியில் பதற்றம் நிலவி வகுகிறது. பாரசீக வளைகுடாவில் வலம் வரும் அமெரிக்கப் போர்க் கப்பலுகளுக்கு ஈரானிய போர்க் கப்பல்கள் நெருக்கடியைத் தருவதாகவும், அவ்வாறு ஈரானியக் போர்க் கப்பல்கள் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டுக் கப்பற்படைக்கு சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டார்.

இதற்கு, ''அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் பாரசீக வளைகுடாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க கப்பல்களும் தரைமட்டமாக்கப்படும்'' என்று ஈரானின் புரட்சிகர காவலாளிப் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹூசைன் சலாமி எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x