Published : 11 May 2020 06:55 AM
Last Updated : 11 May 2020 06:55 AM

கரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா - அமெரிக்கா இணைந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி

வாஷிங்டன்

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த 3 தடுப்பு மருந்துகளை உருவாக்கும் பணியில் அமெரிக்கா - இந்தியா நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த தகவலை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சாந்து நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இந்திய தூதர் தரஞ்சித் கூறியதாவது:

அமெரிக்காவுக்கு என்ன உதவி தேவைப்படுகிறதோ அதை நிறைவேற்றும் நாடாக உள்ளது இந்தியா. மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையம், தேசியசுகாதார நிறுவனங்கள் மற்றும் நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையங்கள் ஆகியவை பல ஆண்டுகளாகவே கூட்டாக இணைந்து பணியாற்றி வருகின்றன. இவை தமக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது.

ரோடா வைரஸ் தடுப்பு மருந்து

இப்போது கரோனா வைரஸை ஒடுக்கும் வகையிலான 3 வகை தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களும் இணைந்து பணியாற்றி வருகின்றன. மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை இரு நாடுகளும் தமக்குள் பரிமாறிக் கொள்வது புதிதல்ல. மூன்று ஆண்டுக்கு முன்பு ரோடா வைரஸ் என்று அழைக்கப்படும் வேறொரு வைரஸ் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை ஐசி எம்ஆர் மற்றும் சிடிசி ஆகியவை இணைந்து உருவாக்கின.

இந்த தடுப்பு மருந்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு மிக உதவியாக இருந்தது. கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் கோவிட் 19 காய்ச்சலை கட்டுப்படுத்துவதிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன.

இவ்வாறு தரஞ்சித் கூறினார்.

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா 59 லட்சம் டாலர் உதவி வழங்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேட்டுக் கொண்டதன்பேரில் இந்தியாவும் அமெரிக்காவுக்கு கடந்த மாதம் மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுவின் மாத்திரைகளை அனுப்பியது. மேலும் சுமார் 87 நாடுகளுக்கு 30 லட்சம் ஹைட்ராக்சி குளோரோகுவின் மாத்திரைகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x