Published : 10 May 2020 04:30 PM
Last Updated : 10 May 2020 04:30 PM
அமெரிக்காவில் கரோனா வைரஸைத் தடுக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையாண்ட விதம் நாட்டை குழப்பமான முழுமையான பேரழிவுக்கு கொண்டுசென்றுள்ளது என்று முன்னாள்அதிபரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான பாரக் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகளவில் கரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். அமெரிக்காவில் இதுவரை கரோனா வைரஸுக்கு 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சம் வரை உயிரிழப்பு இருக்கும் நிலையில் இப்போது குறைந்துவிட்டது என அதிபர் ட்ர்ம்ப் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
கரோனா வைரஸி்ன் தீவிரம் குறித்து அமெரிக்க உளவுத்துறை, மருத்துவ உளவுத்துறை, வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலரும் அதிபர் ட்ரம்புக்கு முன்கூட்டியே பலமுறை எச்சரித்தும் அவர் அதில் அசட்ையாக இருந்துவிட்டார் என அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தி நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற நாளேடுகள் குற்றம்சாட்டுகின்றன
இந்நிலையில், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுடன் பணியாற்றிய ஊழியர்கள் அமைப்பு, முன்னாள் அதிபர் ஒபாமாவுன் காணொலி மூலம் உரையாடும் 30 நிமிட நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இதில் முன்னாள் அதிபர் ஒபாமா பேசுகையில் அதிபர்ட்ரம்பை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், “அமெரிக்காவில் பரவிய கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அதிபர் ட்ரம்புக்கு தெரியவில்லை. அதை எவ்வாறு வெற்றிகரமாகக் கையாளுவது எனத் தெரியாமல், அனைவருக்கும் மறக்க முடியாத காயத்தையும், நோயையும் வழங்கியுளார். கரோனா வைரஸை தடுக்க அதிபர் ட்ரம்ப் கையாண்டது குழப்பமான முழுமையான பேரழிவில் முடிந்துள்ளது. இந்த பெருந்தொற்றை சமாளிக்க அமெரிக்காவுக்கு வலிமையான தலைமை தேவை.
தொடக்கத்திலிருந்தே கரோனா வைரஸ் குறித்த புரிதல் இல்லாமல் அதிபர் ட்ரம்ப் பேசி வந்தார். கரோனா வைரஸ் சாதாரண நோய் என்றார், பின்னர் விரைவில் ஒழிந்துவிடும் என்று பேசிய அதிபர் ட்ரம்ப் மார்ச் மாத நடுப்பகுதியில்தான் கரோனாவின் தீவிரத்தின் உண்மைைய உணர்ந்தார்.
ஒரு குறிப்பிட்ட தனிநபருக்கு எதிராகவோ அல்லது கட்சிக்கு எதிராக போராடவில்லை என்பதால் அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தல் ஒவ்வொரு படிநிலையிலும் முக்கியமானது.
இவ்வாறு அதிபர் ஒபாமா தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT