Published : 09 May 2020 12:24 PM
Last Updated : 09 May 2020 12:24 PM
சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாக்ஸ் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் பேசும்போது, “உலக சுகாதார அமைப்பு உள்நோக்கம் கொண்டு செயல்படுகிறது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் இயலாமையினால் இதனைச் செய்திருக்கிறார்கள். இது தற்போது வெளியே வந்துவிட்டது. ஆனால் அதைப் பற்றிப் பேச அவர்களுக்குத் தெரியவில்லை.
உலக சுகாதார அமைப்பு மீது நான் எடுக்கும் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாகச் செயல்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்காதான் அதிக நிதி உதவி அளிக்கிறது. கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர் வரை அமெரிக்கா நிதி உதவி செய்கிறது. சீனாவோ வெறும் 38 மில்லியன் டாலர்தான் வழங்குகிறது. ஆனாலும் அவ்வமைப்பு சீனாவுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. அவ்வமைப்பு முறையாகச் செயல்பட்டிருந்தால், தற்போது உலக அளவில் ஏற்பட்டு இருக்கும் கரோனா பாதிப்பைத் தடுத்திருக்க முடியும். சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினர். மேலும், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை நிறுத்தி இருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
கரோனா பரவல் தொடர்பாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை விமர்சித்து வருகிறார்.
சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். அது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது.
அமெரிக்காவில் கரோனா தொற்றால் 13, 22,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,616 பேர் பலியாகியுள்ளனர். 2,23,749 பேர் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT