Published : 06 May 2020 01:43 PM
Last Updated : 06 May 2020 01:43 PM

தேர்தலை நடத்த அவசரகதியில் ஊரடங்குக்கு விடைகொடுக்கும் இலங்கை: அச்சத்தில் வணிக நிறுவனங்கள்

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலை இம்முறை திட்டமிட்ட தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக இலங்கையில் ஊரடங்கைக் கட்டாயப்படுத்தி முடிவுக்குக் கொண்டு வர ராஜபக்ச சகோதரர்கள் முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 25-ம் தேதி தேர்தல் நடத்த இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவும் அவரது சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவும் தேதி குறித்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக கரோனோ வைரஸ் பேரிடர் பிரச்சினை எழுந்ததால் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியவில்லை. இதையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 29-ம் தேதி இலங்கை பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “கரோனா தொற்று அபாயம் கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் தேர்தல் அவசியம்தானா? கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்துக்கு இன்னும் ஆயுட்காலம் இருப்பதால் அந்த உறுப்பினர்களை வைத்து நாடாளுமன்றத்தைக் கூட்டி இதற்கு உரிய தீர்வு எடுக்க வேண்டும்” என இலங்கை எதிர்க் கட்சிகள் போர்க்கொடி தூக்கின. ஆனால், “இப்போதுள்ள சூழலில் தனிமனித விலகலை கடைபிடித்து நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுமளவுக்கு நாடாளுமன்றத்தில் போதிய இடவசதிகள் இல்லை” என ஆளும் தரப்பு எதிர்வாதம் செய்தது.

இதனால் இந்த விவகாரம் உலக சுகாதார மையத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, ‘இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் மே 15 -ம் தேதிக்குள் கரோனா வைரஸ் தொற்று அச்சம் முழுமையாக நீங்கி இலங்கை சகஜநிலைக்கு திரும்ப வேண்டும்’ என நிபந்தனை விதித்தது உலக சுகாதார மையம்.

இந்த நிபந்தனையை அடுத்து இலங்கையில் சகஜ நிலை திரும்பிவிட்டதற்கான செயற்கையான சூழலை ஏற்படுத்த அரசு மெனக்கிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் கரோனா தொற்று பரவலில் இன்னமும் சிவப்பு மண்டலத்தில்தான் இருக்கின்றன. மார்ச் 25-ம் தேதி இலங்கையில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு இந்த மாவட்டங்களில் இன்னமும் முற்றாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் இரண்டு நாட்கள் முடக்குவதும் இரண்டு நாட்கள் தளர்த்துவதுமாக ஊரடங்கு விட்டு விட்டுத் தொடர்கிறது.

கரோனா தொற்று இலங்கை ராணுவத்துக்குள்ளும் ஊடுருவி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக இலங்கையில் கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கிறது இலங்கை அரசு. ‘மே 5-ம் தேதி நிலவரப்படி இலங்கையில் இதுவரை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 755. இவர்களில் தற்சமயம் 549 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகிறார்கள். கரோனா அறிகுறி களுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை 145. இதுவரை நோய் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 197. கரோனா வைரஸ் தாக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 9.’ இது இலங்கை அரசின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தந்திருக்கும் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள். இதுவே முழுமையான தகவல் இல்லை என்கிறார்கள் அங்கிருக்கும் எதார்த்தத்தை அறிந்தவர்கள்.

இதனிடையே, அரசின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, கடந்த சில தினங்களாக கரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்தவர்களின் பட்டியலை பிரதானமாக வெளியிட்டு வருகின்றன இலங்கை ஊடகங்கள். அதேபோல், மூடிக்கிடக்கும் வர்த்தக நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் திறக்கச் சொல்லி அதிகாரிகளை வைத்து நெருக்குகிறது அரசு. “அசாதாரணச் சூழலில் ஊரடங்கை விலக்கி அதன் மூலம் கரோனா தொற்று பரவினால் என்னாவது... தேர்தல் நடந்தால் வாக்களிக்க வரும் மக்கள் வரிசையில் நிற்கும்போது எப்படித் தனிமனித விலகலைக் கடைபிடிப்பார்கள்?” என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு, “கரோனா நிவாரணம் பெறுவதற்கும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்களே... அப்போதெல்லாம் பரவாத தொற்று வாக்குச் சாவடியில் நிற்கும் போதுதான் பரவப் போகிறதா?” என்று ஆளும் கட்சிக்காரர்கள் எகத்தாளமாய் பதில் சொல்கிறார்கள்.

இந்த நிலையில், மே 11-ம் தேதி காலை 5 மணிக்கு இலங்கையில் 22 மாவட்டங்களில் ஊரடங்கு முற்றாக விலக்கிக் கொள்ளப்படும் என அறிவித்திருக்கும் அரசு, நோய்த் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும் கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறது.

உலக சுகாதார மையம் விதித்திருக்கும் மே 15-ம் தேதி கெடுவுக்குள் நாடு சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதற்கான தோற்றத்தை உருவாக்க நினைக்கிறது இலங்கை அரசு. ஆனால், இயல்புக்கு மாறாக அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்தினால் ஜன நடமாட்டம் அதிகமாகி ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் கரோனா கட்டுக்கடங்காமல் போய்விட வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வணிக நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x