Published : 05 May 2020 05:13 PM
Last Updated : 05 May 2020 05:13 PM
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் கரோனா வைரஸைத் தாக்கி, செயலிழக்கச் செய்யும் நோய் எதிர்ப்பு சக்தியை இஸ்ரேல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்து அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 36 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.50 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு கட்டத்தை அடைந்துள்ளன.
இந்நிலையில் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி செயலிழக்கச் செய்யும் நோய் எதிர்ப்பு சக்தியை இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது கரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நஃப்தலி பென்னட் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “கரோனா வைரஸுக்கு எதிரான சிகிச்சையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். கரோனா வைரஸைத் தாக்கி, செயலிழக்கச்செய்யும் 'மோனோகுளோனல் நியூஸ்ட்ரலைஸிங் ஆன்டிபாடி' இஸ்ரேல் உயிரி ஆய்வு அமைப்பு (ஐஐபிஆர்) கண்டுபிடித்துள்ளது. அதாவது கரோனா வைரஸின் கோவிட்-19 நோயைப் பரப்பும் காரணமான வைரஸை இந்த நோய் எதிர்ப்பு சக்தி செயலிழக்கச் செய்யும்” எனத் தெரிவித்தார்.
மோனோகுளோனல் ஆன்டிபாடி என்பது, ஓரின நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட பி வகை வெள்ளையணுக்களாகும்.
இஸ்ரேல் உயிரி ஆய்வக அமைப்பின் இயக்குநர் ஷமுல் ஷப்ரியா கூறுகையில், “கரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபடித்துவிட்டோம். இனிமேல் அதை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்போகிறோம்.
எங்களின் இந்த ஃபார்முலாவுக்குக் காப்புரிமையும் வாங்கி இருக்கிறோம். எங்களின் இந்த ஆய்வு இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடந்தது. ஆதலால், இந்தத் தடுப்பு மருந்து குறித்த அடுத்தகட்ட தகவல்கள் ஏதும் கூற முடியாது.
கரோனா வைரஸுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் நாங்கள் கண்டுபிடித்துள்ள நோய் எதிர்ப்பு சக்தி உண்மையில் சிறப்பாக வேலை செய்யும். பல்வேறு நிறுவனங்கள் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்து மனிதர்கள் உடலில் செலுத்தி பரிசோதித்து வருகின்றன. விரைவில் நாங்கள் கண்டுபிடித்த மருந்து உற்பத்தி தொடங்க உள்ளது. ஆனால், மனிதர்கள் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்படுமா என்பது தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment