Published : 05 May 2020 02:41 PM
Last Updated : 05 May 2020 02:41 PM
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள லாக்டவுனால் இந்தியாவுக்கு வர முடியாமல் அமெரிக்காவில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர இந்த வாரத்தில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
எந்தத் தேதியில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன் டிசி ஆகிய நகரங்களிலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
கரோனாவால் அமெரிக்கா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர 12 லட்சம் பேருக்கு அதிகமாகவும், 60 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள், இந்திய மாணவர்கள், சுற்றுலா சென்ற இந்தியர்கள், நாடு திரும்ப முடியாமல் சிக்கி இருக்கிறார்கள்.
இவர்கள் தாயகம் திரும்ப விரும்பினாலும், இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக வரமுடியாமல் இருக்கிறார்கள். இவர்களை அழைத்து வரும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக மாலத்தீவுக்கு இரு கப்பல்களும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரு கப்பல்களும் இன்று புறப்பட்டுச் சென்றன. வரும் 7-ம் தேதி முதல் வளைகுடா நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட உள்ளனர்.
இந்த சூழலில் அமெரிக்காவில் சிக்கி இருக்கும் இந்தியர்கள், மாணவர்களையும் மீட்க மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் ஜெய்ப்பூர் அமைப்பின் தலைவர் பிரேம் பந்தாரி கூறுகையில், “அமெரிக்காவில் சிக்கியிருக்கும் இந்தியர்களை இந்திய அரசு அழைத்துச் செல்வது என்பது எனக்குத் தெரிந்து இதுதான் முதல் முறை. இதற்கான பணிகளை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் கடந்த வாரத்திலிருந்து தொடங்கியுள்ளன. இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று வருகின்றன. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அமெரிக்காவில் இருக்கும் ஏராளமான இந்தியர்கள், மாணவர்கள், சுற்றுலா வந்தவர்கள் நாள்தோறும் எனக்கு தொலைபேசியில் பேசுகிறார்கள். பலரிடம் கையில் பணமில்லை, மருந்துகள் இல்லை, மாணவர்கள் தங்குமிடம் இல்லாமல், பணமில்லாமல் தவிக்கிறார்கள். இதுகுறித்து கடந்த வாரம் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஸ் வர்த்தன் ஸ்ரிங்காலாவுக்கும், விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் பிரதீப் சிங் கரோலாவுக்கும் கடிதம் எழுதி நிலைமையைத் தெரிவித்தேன்.
குறிப்பாக மூத்த குடிமக்கள் மருந்துகள் இல்லாமலும், மாணவர்கள் பணமில்லாமல் தவிப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பலரிடம் மருத்துவக் காப்பீடு இருந்தும் இப்போது பலனளிக்கவில்லை. இப்போதுள்ள சூழலில் இந்தியர்களைத் தாயகம் அழைத்துச்செல்வதுதான் சிறந்த வழி. இந்திய அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்தேன்” என்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்துவை இந்தியர்கள் பலரும் சென்று சந்தித்து, தங்களை தாயகம் அழைத்துச் செல்ல கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே அமெரிக்காவின் ஜெய்ப்பூர் அமைப்பின் தலைவர் பிரேம் பந்தாரி, கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு எழுதிய கடிதத்தில் இந்தியர்களுக்கான விசா கட்டண நீட்டிப்பைக் குறைக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
அங்குள்ள சூழலைக் கருதி இந்த வாரத்திலிருந்து இந்தியர்களை அழைத்துச்செல்லும் பணியை மத்திய அரசு தொடங்குகிறது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் விமானத்தில் புறப்படும் முன் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிந்தபின்புதான் அனுமதிக்கப்பட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT