Published : 03 May 2020 03:07 PM
Last Updated : 03 May 2020 03:07 PM
கரோனா காலத்திலும் உலக அளவில் வேகமாகப் பரவிய மற்றொரு செய்தி என்றால் அது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றியதுதான். இருபது நாட்கள் கிம் எங்கு சென்றார், அவருக்கு என்ன ஆயிற்று, ஒருவேலை இறந்துவிட்டாரோ என செய்திகள் உலாவிய நிலையில் நேற்று முன்தினம் அந்நாட்டு அரசு நிகழ்ச்சியில் அதிபர் கிம் கலந்துகொண்ட ஒளிப்படம் இந்தச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த ஒளிப்படம் வடகொரிய மத்திய செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒளிப்படத்தில் இருப்பது கிம்தானா என்பதை உறுதி செய்வதற்கு ஆதாரமாக இருந்தது அவருடைய சகோதரி கிம் யோ ஜாங்கும் படத்தில் இடம்பெற்று இருந்ததுதான். அந்த அளவுக்கு அதிபர் கிம்மின் நிழலாக உள்ளவர் கிம் யோ ஜாங்.
அதிபர் கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும் வலம் வருகிறார். அதிபர் கிம் இறந்துவிட்டார் என தவறான செய்திகள் உலக அளவில் பகிரப்பட்டபோது அப்பதவிக்கு கிம் யோ ஜாங்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் விமர்சகர்கள் ஆரூடம் தெரிவித்திருந்தனர். அந்த அளவுக்கு வடகொரியாவில் அதிகாரம் படைத்த நபராக உள்ளார் கிம் யோ ஜாங்.
யார் இந்த கிம் யோ ஜாங்?
கிம் யோ ஜாங் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னர் வடகொரியாவில் நிலவும் அரசியலைப் புரிந்துகொள்வது அவசியமாகும். 1948-ம் ஆண்டு தனிநாடாக உருவான வடகொரியாவின் முதல் அதிபர் கிம் இல் சங். இவர்தான் வடகொரிய நிறுவனத் தலைவர். கம்யூனிச நாடு எனத் தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் வடகொரியாவில் தற்போதுவரை கிம் குடும்பத்தினர் மட்டும்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கிம் இல் சங் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் கிம் ஜாங் இல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2011-ம் ஆண்டுவரை அதிபராகப் பொறுப்பு வகித்தார். கிம் ஜாங் இல்லின் மறைவுக்குப் பிறகு அவருடைய மகனான கிம் ஜாங் உன் வடகொரியாவின் மூன்றாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். தன்னுடைய 27-வது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் இளம் வயது அதிபர் கிம் ஜாங் உன்தான். வடகொரியாவின் எல்லா காலகட்டத்திலும் கிம்களின் ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது என்பதற்கு மற்றொரு சாட்சியாக கிம் ஜாங் உன் உள்ளார்.
கம்யூனிச ஆட்சிமுறையைப் பின்பற்றினாலும் கிம் குடும்பத்தினரின் வாரிசு ஆட்சி நடைபெறுவது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில்தான் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என செய்திகள் பரவத் தொடங்கியபோது அந்தப் பதவிக்கு அவருடைய தங்கை கிம் யோ ஜாங் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற பேச்சுகள் உருவாகின. அந்த அளவுக்கு வடகொரியாவின் முக்கியத் தலைவராக வலம் வந்துகொண்டிருக்கிறார் கிம் யோ ஜாங்.
கணினி அறிவியல் பட்டதாரியான கிம் யோ ஜாங் பள்ளி நாட்களிலிருந்தே அண்ணன் கிம்மின் பாசமிகு தங்கையாக வலம் வருபவர். இருவரும் சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் சர்வதேசப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். தந்தை கிம் ஜாங் இல்லின் மறைவின்போதுதான் முதல் முறையாக ஊடகத்தின் வெளிச்சத்திற்கு வந்தார் கிம் யோ ஜாங். அண்ணன் கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே கிம் யோ ஜாங்கின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. 2014-ம் ஆண்டு வடகொரியத் தொழிலாளர் கட்சியின் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சித் துறையின் துணை இயக்குநராகச் செயல்பட்டார். இதுவொன்றும் நாம் நினைப்பதுபோல் சாதாரண பதவி கிடையாது. வடகொரியாவின் முக்கியமான பதவியாகும்.
கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே தன்னுடைய தங்கைக்கு அரசியலில் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் அதிபர் கிம்மின் புகழை மக்களிடம் பரப்புவதே அவருடைய முக்கிய பணியாக இருந்தது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு வடகொரிய தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிம் யோ ஜாங். அதிபர் கிம் நினைப்பதை அடுத்த நொடியில் செய்து முடிக்கும் கிம் யோ ஜாங் 2018-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய அரசு சார்பில் பங்கேற்றார்.
இதன்மூலம் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்து அதிக அளவு அதிகாரம் படைத்தவர் கிம் யோ ஜாங்தான் என்பதை இந்நிகழ்வு உலகறியச் செய்தது. ஏன்னெற்றால் கிம் குடும்பத்தினர் சார்பில் தென்கொரியாவுக்கு அதிகாரபூர்வமாக சென்ற முதல் நபர் கிம் யோ ஜாங்தான். அதேபோல் வரலாற்றுச் சந்திப்புகளான வடகொரிய, தென்கொரிய அதிபர்கள் பத்தாண்டுகள் கழித்துக் கடந்த 2018-ம் ஆண்டு சந்தித்தது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சந்திப்பின்போது கிம் யோ ஜாங் மட்டும் கிம்மின் அருகே இருந்தே ஒரே நபர் ஆவார்.
அப்போது அமெரிக்கா, வடகொரியா இடையே கடந்த 2018-ம் ஆண்டு பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களில் அதிபர் கிம் கையெழுத்துப் போடுவதற்கான பேனா வழங்கியது, வடகொரிய அரசின் முத்திரை பதிவிட்டது போன்றவற்றைச் செய்தவர் கிம் யோ ஜாங்தான். இந்த முக்கிய ஒப்பந்தங்களில் என்னென்ன இடம்பெறவேண்டும் என்பதில் கிம் யோ ஜாங் பங்கு முக்கியமானதாகும்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் வடகொரியாவுக்கு சாதகமான விஷயங்களைச் சர்வதேச அளவில் முன்னெடுப்பதில் கிம் யோ ஜாங் பார்வை விசாலமானது. தன்னுடைய அரசியல் அறிவாலும் முதிர்ச்சியான செயல்பாடுகளினாலும் வடகொரிய அரசியலில் தவிர்க்க முடியாத நபராக உள்ளார் கிம் யோ ஜாங். இவரின் தந்தையான கிம் ஜாங் இல் “இளம் வயதிலேயே விஷயங்களை வேகமாகப் புரிந்துகொள்வதும் அரசியலில் ஆர்வம் காட்டும் பாங்கு கிம் யோ ஜாங்கிற்கு உண்டு” எனப் பாராட்டியுள்ளார்.
வடகொரியாவில் ஏதேனும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தால் மேலும் கிம் பரம்பரையில் நேரடி ரத்த வாரிசாக தற்போது உள்ளவர் கிம் யோ ஜாங் மட்டுமே. தற்போது அதிபராக உள்ள கிம்மின் குழந்தைகள்கூட இளம் வயதினர்தான். வடகொரியாவில் குடும்ப ஆட்சி முறையில் மாற்றம் நிகழாதவரையில் எதிர்காலத்திலும் கிம்களின் ராஜ்ஜியம்தான் தொடரும். அப்படி நிகழ்ந்தால் பாலின பேதங்களைத் தகர்த்து வடகொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றைப் படைப்பார் கிம் யோ ஜாங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT