Published : 02 May 2020 07:06 PM
Last Updated : 02 May 2020 07:06 PM

நியூயார்க்கில் நடப்புக் கல்வியாண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இயங்காது

கரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வருகிற நிலையில், நியூயார்க் மாகணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இந்தக் கல்வியாண்டு முழுவதும் மூடப்பட்டு இருக்கும் என்று அம்மாகாண கவர்னர் ஆண்ட்ரூ க்யூமோ அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிற மாகணங்களைவிட நியூயார்க்கில் கரோனா தொற்று அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை நியூயார்க் அரசு அறிவிக்காவிட்டாலும், பள்ளி, கல்லூரிகளை ஆரம்ப நிலையிலேயே மூடிவிட்டது. இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டு முழுமைக்குமாக பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் 7,500 அளவில் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. அங்கு மொத்தம் 42 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். நடப்புக் கல்வியாண்டு ஜூன் மாதத்தில் முடிவடைகிறது. இந்நிலையில், அதுவரையில் கல்வி நிலையங்கள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ க்யூமோ கூறியதாவது, “கரோனா தொற்றிலிருந்து நமது மாணவர்களைப் பாதுகாப்பது மிக முக்கியமான பணி. தற்போதைய சூழலில், முன்னேற்பாடுகள் மேற்கொண்டு பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது சாத்தியமில்லை. அது தொடர்பாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தற்போது எடுக்க முடியாது.

பொதுப் போக்குவரத்தில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து, முகக் கவசம் அணியச் செய்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பள்ளிகளை இயங்கச் செய்வது மிகச் சிக்கலான பணி. எனவே இந்தக் கல்வியாண்டு முழுமையாக கல்வி நிலையங்களை மூட முடிவெடுத்துள்ளோம்.

அதேசமயம் அனைத்துக் கல்வி நிலையங்களும் தொலைதூரக் கல்வியைத் தொடர்ந்து வழங்கும். மாணவர்களுக்கான உணவு முறையாக விநியோகம் செய்யப்படும். குழுந்தை நலச் சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளும் கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு இனி வரும் பள்ளிச் செயல்பாடுகளைத் திட்டமிட வேண்டும்” என்றார்.

நியூயார்க்கில் புதிதாக 3,942 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,314 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x