ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் 3 பேர் பலி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் சிறை அருகில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். 4 பாதுகாப்பு அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் லாக்மன் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை அருகே இன்று (சனிக்கிழமை) தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தினர். இதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் பலியாகினர்” என்றார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸை எதிர்த்து உலக நாடுகள் போராடி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இத்தகைய தாக்குதல் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in