

கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவும், தாய்லாந்தும் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 200க்கு மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவிய கரோனா வைரஸ் தாக்கம் இப்போது ஆசிய நாடுகளிலும் அதன் தீவிரத்தை காட்ட தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், தாய்லாந்தும் இணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவுடன் வரலாறு ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஆழ்ந்த தொடர்புடைய தாய்லாந்து நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓசா கரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். கரோனா வைரஸுக்கு எதிராக தாய்லாந்தும், இந்தியாவும் இணைந்து போராடும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,336 ஆக அதிகரித்துள்ளது. 1,218 பேர் பலியாகி உள்ளனர்.
மற்றொரு பக்கத்தில் தாய்லாந்தில் 2,966 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 பேர் பலியாகி உள்ளனர்.
உலக முழுவதும் கரோனா வைரஸுக்கு 34, 01,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,39,604 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து உள்ளனர்.