Published : 30 Apr 2020 08:13 PM
Last Updated : 30 Apr 2020 08:13 PM
உலக சுகாதார அமைப்பு சீனாவின் ஊதுகுழலாகச் செயல்பட்டு வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. முறைப்படி கரோனா வைரஸ் தொடர்பாக அவ்வமைப்பு அதிகம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அவை முறையான தகவலை அளிக்கவில்லை. எனில், ஒன்று அவ்வமைப்புக்கு எதுவும் தெரியவில்லை அல்லது அது எதையோ மறைக்கிறது என்று அர்த்தம்.
அவ்வமைப்புக்கு அமெரிக்காதான் அதிக நிதி உதவி அளிக்கிறது. கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர் வரை அமெரிக்கா நிதி உதவி செய்கிறது. சீனாவோ வெறும் 38 மில்லியன் டாலர்தான் வழங்குகிறது. ஆனாலும் அவ்வமைப்பு சீனாவுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. அவ்வமைப்பு முறையாகச் செயல்பட்டிருந்தால், தற்போது உலக அளவில் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பைத் தடுத்திருக்க முடியும். சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது .
சீனாவும் கரோனா விஷயத்தில் முறையாக நடந்துகொள்ளவில்லை. கரோனா தொற்று இருப்பது தெரிந்தும், வூஹானிலிருந்து பிற நாடுகளுக்கு விமானச் சேவையை அனுமதித்தது. ஆனால், பிற நாடுகளிலிருந்து சீனாவுக்கு விமானங்கள் வருவதைத் தடை செய்தது. சீனா நினைத்திருந்தால் இந்த வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவுவதை தடுத்திருக்க முடியும். ஆனால் அது அவ்வாறாகச் செயல்படவில்லை” என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை அமெரிக்கா தற்போது நிறுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கரோனா தொடர்பாக சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு மீது அமெரிக்கா தரப்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் அமெரிக்கா கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உலக அளவில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாக உள்ளது. இதுவரையில் அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் 61,500-ஐத் தாண்டியுள்ளது.
கரோனா பரவல் தொடர்பாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை விமர்சித்து வருகிறார்.
முன்னதாக, சீனாவிலுள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் முன்வைத்தார். அது தொடர்பாக அமெரிக்கக் குழு வூஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய சீனா அனுமதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். ஆனால், அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT